Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

டெஸ்ட் ரியூப் பேபி - மலடர் என்ற பெயர் அழிய வழிசமைத்தவர்

$
0
0
மலடர் என்ற பெயர் அழிய வழிசமைத்த மருத்துவ மேதையின் மறைவு
டெஸ்ட் டியூப் பேபியின் தந்தை ரொபேட் எட்வேர்ட்ஸ்

 'மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல் தாயென்ற பெருமைதனை தந்தவன்' என திரைப்படத்தில் தாய் ஒருத்தி தனது மகனைப் புகழ்ந்து பாடியது உங்களுக்கும் தெரிந்திருக்கும். "அமுதும் தேனும் எதற்கு.." என ஆரம்பிக்கும் பாடல் அது.



அது உணர்வு நிலையில் சரியானதாகும். ஆனால் விஞ்ஞான ரீதியாகப் பார்க்கும்போது தானே தனது தாய்க்குக் குழந்தையாக உருவாவதற்கு ஒரு குழந்தையானது எந்தவித உதவியையோ ஒத்துழைப்பையோ வழங்க முடியாது. தாய் தந்தையரின் கூடலின் பயனாக முட்டையும் விந்தணுவும் இணைவதால் உற்பத்தியாவதுதான் குழந்தையாகும்.

ஆனால் அது தாய் தந்தையரின் முயற்சியால் மட்டும் உற்பத்தியானது என்று சொல்லலாமா?

குழந்தையின்மை ஏன்?

உலகளாவிய ரீதியல் 100க்குப் 10 சதவிகிதமான தம்பதிகள் குழந்தைகளின்றி மனஅவதிக்கு ஆளாகியுள்ளனர். எவ்வளவுதான் முயற்சித்தாலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியவில்லை. 'மலடன் மலடி' எனச் சுற்றி இருப்பவர்கள் அவர்களை முதுக்குப் பின்னாலாவது இழிவுபடுத்துகிறார்கள்.

அப்படியானால் குழந்தைப் பேறென்பது கடவுளின் கொடையா? குழந்தையின்மை அவரது தண்டனையா?

விஞ்ஞானம் முன்னேறி மலட்டுத்தன்மைக்கான சிகிச்சைகள் அற்புதமாக வளர்ச்சி அடைந்துவிட்டபோதும் 'கடவுள் கண் திறக்கவில்லை' என விதியிலும் கடவுளிலும் பழியைப்போட்டு தம் அறிவுக் கண் திறக்காத பேதமையில் இன்னமும் பலர் துயருறுகிறார்கள்.

35 வருடங்களுக்கு முன்னர், சரியாக சொன்னால் July 25 1978 அன்று, 15 வருடங்களாகக் குழந்தையின்மையால் அவதிப்பட்ட John மற்றும்
Lesly Brown தம்பதியினருக்கு Louise Brown பிறந்தான். அவன் பிறந்தது ஆய்வுகூட கருக்கட்டல் (IVF) முறையாலாகும் நாம் பொதுவாக டெஸ்ட் ரியூப் பேபி என்று சொல்வோம். அது ஒரு ஆச்சரியமான விஞ்ஞானச் சாதனை. இன்று குளோனிங் முறையில் குழந்தை பிறந்தால் எத்துணை ஆச்சரியமோ அதை ஒத்த ஆச்சரியம்.



ஆனால் அந்நேரத்தில் அந்த முயற்சிக்கு எந்தளவு எதிர்ப்புகள் இருந்தது தெரியுமா?

'இது மனித இனத்திற்கு பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடு. ஏனெனில் இது இனப்பெருக்கத்தை தாம்பத்திய உறவிலிருந்து பிரித்துவிடும் செயற்பாடாக இருக்கிறது' என வத்திகன் தவறு கண்டது.

அவ்வாறு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பெண்ணினது முட்டையையும் ஆணின் விந்தணுவையும் உடலுக்கு வெளியே ஆய்வுகூடத்தில் இணைத்து கருக்கட்டல் (Fertilisation) செய்து பின் அதனை பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தை பெறுவதற்கு முதன் முதலில் வழியமைத்தவர்கள் Physologisஆன Robert Edwardsமற்றும் மகப்பேற்று மருத்துவரான Patrick Steptoeஆவர்


வத்திகனின் கண்டனம், பழைமை பேணிகளின் எதிர்ப்புக் கூச்சல் மட்டுமின்றி சகமருத்துவரகள் மற்றும் விஞ்ஞானிகளின் அங்கீகாரம் கூட இவர்களுக்கு அந்நேரத்தில் கிடைக்கவில்லை,

மிக மடைத்தனமான காரணம் காட்டி மருத்துவ ஆராச்சிக் கழகம் இவர்களது ஆய்வு முயற்சிகளுக்கு 1970 ல் நிதியுதவி அளிக்க மறுத்தது. 'உலகம் ஏற்கனவே சனத்தொகைப் பெருக்கத்தால் அல்லாடுகிறது' என்று காரணம் சொன்னார்கள்.

'புதிய மருந்துகளைக் கண்டுபிடித்து மனிதர்களின் மரணத்தைத் தடுப்பதும் சனத்தொகைப் பெருக்கத்திற்கு வித்திடுகிறது' என்று சாதரணர்களாகிய நாமே எதிர்க்கேள்வி கேட்க கூடிய நிலையில் எமது பட்டறிவு இன்று இருக்கிறது.

ஆனால் அன்று விஞ்ஞான உலகம் கூட அத்தகைய ஆய்வுகளை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. காரணங்களையும் அடிப்படை உண்மைகளையும் தேடும் முன்னோடியான விஞ்ஞான ஆய்வு முயற்சிகளை, தவறான முன்முடிவுகளாலும் பாரபட்சத்தினாலும் பழமையிலிருந்து முற்றும் விடுபடாத தன்மையாலும் தடுக்க முயன்றார்கள்.

ஆனால் அவர் சோர்ந்துவிடவில்லை. அமெரிக்காவிலிருந்து கிடைத்த சில நிதி உதவிகளுடன் தொடர்ந்தார்.

நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் தகர்த்தல்

'விஞ்ஞானம் என்பது செல்வம், வாய்ப்பு வசதி, பாதுகாப்புகளை மட்டுமே தேடி ஓடுகிறது, மனித மனஉணர்வுகளைப் புரியாத தட்டையான கல்வி'  என இலக்கிய நண்பர் ஒருவர் நக்கலாகச் சொல்வார். ஆனால் இவர்களது அறிவியல் பாய்சலானது லட்சோபலட்சம் மனிதர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதை நாம் இன்று உணர்கிறோம்.

பாரம்பரியம், மதங்கள், ஐதீகங்கள் நிறைந்த பழமைபேணிகளின் இருளும் வன்மையும் நிறைந்த கோட்டையிலிருந்து மனிதக் கருமுளையை மீட்டெடுத்து ஆய்வுகூடத்திற்கு கொண்டுவந்ததால் அது சாத்தியமாயிற்று.

பலரின் எதிர்பிற்கும் இன்னும் பலரின் தயக்கத்திற்கும் காரணம் மனித உடலின் புனிதம் பற்றியும் கடவுளின் ஆற்றல் பற்றியதுமான நம்பிக்கை அவர்களிடம் ஆழ வேருன்றியிருந்தமைதான். சில தெளிவற்ற விஞ்ஞானத் தத்துவங்களும் உள்ளார்ந்த பய உணர்வுகளும் கலந்திருந்ததை மறுக்க முடியாது.

குழந்தை கிடைப்பதோ குழந்தையின்மை என்பதோ கடவுளின் சங்கற்பம் என்றிருந்தார்கள். குழந்தைகள் அங்கவீனமாகப் பிறப்பது அவன் சித்தம் என நம்பப்பட்டது. விஞ்ஞானம் செயற்கை முறையில் குழந்தை பெற வைப்பதும் அங்கவீனக் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதும் 'தக்கன பிழைத்து வாழ்தல்' என்ற டாவினின் தத்வத்தை மறுதலித்து மனித இனத்தின் அழிவிற்கு வழிவகுக்கும் என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அத்துடன் அது உடலுறவின் ஆனந்தத்தையும் தாம்பத்திய வாழ்வின் நெருக்கத்தையும் கெடுத்துவிடும் என எதிர்மறையாகக் கருத்துகளை வெளியிட்டனர்.

குழந்தையற்றோரின் உழைச்சல்

ஆனால் டொக்டர் ரெபேட் எட்வேட்ஸ் குழந்தையில்லாத தம்பதிகளின் மன உளைச்சலைப் பரிவோடு நோக்கினார்.


'குழந்தையில்லாமல் இருப்பதும் அதற்காக முயற்சிகள் செய்தும் பலன் கிட்டாமல் ஏமாறுவதும் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும். ஆற்றாமை, கோபம், குற்றவுணர்வு போன்றவை எங்கிருந்து வந்தது எனத் தெரியாமலே உள்ளத்தில் ஆழப் புகுந்து கொள்ளும். உறவுகளில் விரிசலையும் நட்புகளில் பிரிவையும் கொண்டுவரும். வாழ்வு ஸ்தம்பித்து விட்டதாக உணர்வார்கள்.

என்றுமே சாத்தியப்படாத எதற்காகவோ அர்த்தமின்றிக் காத்திருப்பதான நிராசை ஆட்கொள்ளலாம். தனிமையும், தனித்துவிடப்பட்டதான உணர்வும் ஏற்படும். எல்லாத் தோல்விகளுக்கும் தானே காரணம் என்ற மனவிரக்தியும் ஆட்கொள்ளலாம்.'

இவை நான் சொல்பவை அல்ல. குழந்தையின்றி இருந்து இவரின் சிகிச்சையின் பலனாக இரு குழந்தைகளுக்குத் தாயாக முடிந்த Kate Brianனின் உணர்வுகள். அவரை முதல் முதலில் சந்திக்கச் சென்றபோது இருந்த அவளின் உணர்வுகள் அவை.

1968ல் அவரின் முன்னோடி முயற்சியின் முதல் வெற்றி கண்சிமிட்டியது. ஆய்வு கூட கோப்பையில் ஒரு மனித விந்தணுவையும் முட்டையையும் இணைத்தார். நுணுக்குக்கண்ணாடியில் பார்த்தபோது யூரேகா என்று சொல்லிக் கொண்டு ஆனந்தத்தில் ஓட வேண்டிய ஆச்சரியம் அவருக்கு காத்திருந்தது. ஆய்வுகூடக் கோப்பையில் முட்டையும் விந்துவும் இணைந்து கரு வளருவதற்கான ஆரம்ப நிகழ்வு நடந்திருந்தது. அங்கு எட்டுக் கலங்களேயான பிளாஸ்டோசைட் (blastocyst) உருவாகியிருந்தது. ஆம் அது ஒரு கருமுளையத்தின் ஆரம்ப நிலையாகும்.

ஆம் பெண்ணின் உடலுக்கு வெளியே கருத்தரித்தலை அவரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது.


Robert Edwards  மற்றும் மகப்பேற்று மருத்துவரான Patrick Steptoeஆகிய இருவரும் இணைந்து செயலாற்றத் தொடங்கினர்.

அவர்களது ஆரம்ப முயற்சிகள் அயர்ச்சியளிப்பதாக இருந்தன. Steptoeவின் மருத்துவமனை Oldhamல் இருந்தது. இவர் இருந்தது கேம்பிரிட்ஸ் ஆகும்.
Edwardsவாரத்தில் பல தடவைகள் தன் இடத்திலிருந்து சுமார் 200 மைல் பிரயாணம் செய்து குழந்தையற்ற பெண்களுக்கு உதவ வேண்டியிருந்தது. சுமார் ஐந்து வருடங்கள் முழு முயற்சி எடுத்தும் 1977 வரை அவர்கள் தோல்விகளையே சந்திக்க நேர்ந்தது.

1977 நவம்பர் மாதத்தில் அத்தகைய ஒரு பிளாஸ்டோசைட் (blastocyst) யை திருமதி Lesly Brownனின் கருப்பையில் வெற்றிகரமாக வைத்தார் 1978 ஜீலை மாதம் Louise Brown பிறந்தான். அதற்குப் பின் இரு தோல்விகள் வந்தன. நாலாவது முயற்சியில் Alastair Montgomeryபிறந்தான்.


அதன் பின் 1988 ல் Steptoe இறக்கும்வரை 1000 குழந்தைகள் அவர்களது மருத்துமனையில் பிறந்திருந்தார்கள்.

நீண்ட தாமதத்தின் பின்னரதான்; அந்த மகத்தான சாதனையை நோபல் பரிசுக்குழு கண்டு கொண்டது. 2010 ல் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கபட்டபோது ஏற்கனவே 4.3 மில்லியன் குழந்தைகள் IVFமுறையில் பிறந்திருந்தனர்.


ஆனால் அன்று கூட மதப்பிரிவினரிடமிருந்து நக்கல் தொனியில் ஒரு கண்டனம் எழுந்தது. 'எட்வேட்ஸ் இல்லாதிருந்தால் பல பீரிஸர்கள் கருமுளைகளால் நிறைந்திருக்காது. அவை கருப்பையில் வைக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன. அல்லது ஆராச்சிகளுக்குப் பயன்படும். அல்லது இறந்து போகவும் கூடும்.' என்றார்.

இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை. Ignacio Carrasco de Paulaஎன்ற வத்திகனைச் சார்ந்தவர்தான். இவர் Pontifical Academy for Life at the Vatican னின் தலைவராவார். ஆம் இன்றும் மதத்தின் பேரால் உமிழப்படும் நச்சுக் குரல்கள் ஓயவில்லை.

இத்தனை எதிர்புகளையும் தாண்டி இன்றுவரை சுமார் 5 மில்லியன் குழந்தைகள் IVFமுறையில் பிறந்திருப்பதற்குக் காரணம் யார்? மக்கள் சக்தி, குழந்தையின்றி தேம்பியோரின் துணிச்சலான முன்னோக்கிய அடிகள்தான்.

ஆரம்பத்தில் மதங்கள் மட்டுமின்றி விஞ்ஞான உலகமும் சந்தேகத்தோடு நோக்கியபோது குழந்தையற்றோர் தங்களுக்கு குழந்தை வேண்டுமென அவர்களை முற்றுகையிட்டனர். அவர்களது ஆதரவின்றி இந்தச் சாதனை நடந்திராது.

மருத்துவர்கள் பின் தொடர்ந்தனர். இவர்களிடம் பயிற்சிகள் பெற்றனர். உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான IVFநிலையங்கள் இயங்குகின்றன.

பிரித்தானிய அரசு அவரது சேவையைக் கௌரவிக்குமுகமாக 2011ல் நைட் பட்டம் கொடுத்தது

அவ்வாறு இலட்சக்ணகணக்கான மலட்டுப் தம்பதியிர் பெற்றோராவதற்கு வழி அமைத்துக்கொடுத்த ரொபேட் எட்வேர்ட்ஸ் தனது 87 வயதில் காலமானார். உலக சஞ்சிகைகள் அவரது மறைவு ஒட்டி கட்டுரைகள் வெளியிட்டன.

பல நூல்களையும் இவை சம்பந்தமாக எழுதியுள்ளார்.
 

  1. A Matter of Life (1980, with Patrick Steptoe)
  2. Conception in the Human Female (1980, with CR Austin)
  3. Mechanisms of Sex Differentiation in Animals and Man (1980, with JM Purdy)
  4. Human Conception in Vitro (1982, with JM Purdy and Patrick Steptoe)
  5. Implantation of the Human Embryo (1985, with M Seppälä)
  6. In Vitro Fertilisation and Embryo Transfer (1985); and Life Before Birth (1989).
நம்நாட்டில்

அவரைப் பின்பற்றி எமது நாட்டில் முதல் டெஸ்ட டியூப் பேபியை உருவாக்கியவர் கிழக்கலங்கையைப் பிறப்பிடமாக் கொண்ட தமிழ் மருத்துவரான வேல்முருகு அருளானந்தராஜா ஆவார். கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த தம்பதிகளுககே இலங்கையின் முதல் IVFகுழந்தை பிறந்தது. மகப்பேற்று நிபுணரான டொக்டர் அருளானந்தராஜா 1999 நவம்பர் 10ம் திகதி பம்பலப்பிட்டியில் உள்ள அவரது நியூலங்கா கொஸ்பிட்டலில் அந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

அந்தச் சாதனையைச் செய்த டொக்டர் V.அருளானந்தராஜா அவர்கள் சென்ற 2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ம் திகதி; காலமானார். ஆனால் அவரது மறைவை எமது ஊடகங்கள் பெருமளவில் கண்டுகொள்ளாமை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.00.00.0

Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles