இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்தால் இரத்தக் குழாய்களில் அது படியும். அடைப்பு ஏற்படும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய்கள் போன்ற பலவும் வரலாம் என்பது உங்களுக்குத் தெரியும். கொலஸ்டரோலைக் குறைப்பதற்கு மருந்துகள் இருப்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்த மருந்துகளைத் தொடர்ந்து போடக் கூடாது என்ற தவறான ஆலோசனையை யாராவது கூறியிருப்பார்கள்.
அந்த மருந்துகள் எவை, அவை யாருக்குத் தேவை, அவை எதற்காகப் போடப்படுகின்றன. பக்க விளைவுகள் உள்ளனவா போன்றவை பற்றிய விபரங்களை நீங்கள் அறிந்திருப்பது அவசியம்.
யாருக்கு
இருதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புள்ளவர்களுக்கும், அது எற்கனவே வந்தவர்களுக்கு மீண்டும் வராமல் தடுப்பதற்கும் கொலஸ்டரோல் அதிகரிக்காமல் காப்பாற்றுவது அவசியம். இதைச் செய்வதற்கு உணவு முறை மாற்றங்கள், உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சி ஆகியவை அடிப்படையானவை
இவற்றுடன் கொலஸ்டரோலைக் குறைப்பதற்கான மருந்துகளும் அவசியமாகலாம்.
எனவே இருதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது.
அதிக சாத்தியமுள்ளவர்கள்
- நீரிழிவு நோயுள்ளவர்கள்
- பரம்பரையில் கொலஸ்டரோல் உள்ளவர்கள்
- முதியவர்கள் முக்கியமாக 75 வயதைத் தாண்டியவர்கள்
- புகைப்பவர்கள்
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
ஓரளவு சாத்தியமுள்ளவர்கள்
இவர்களைத் தவிர மேலும் பலருக்கு மேற் கூறிய ஆபத்துகள் (இருதய நோய் மற்றும் பக்கவாதம்) வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.
- ஆண்களுக்கு பெண்களைவிட அதிகம். ஆயினும் மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கும் ஆண்களளவு ஆபத்து உண்டு.
- காலத்திற்கு முந்தி மாதவிடாய் நின்றவர்கள். பொதுவாக 50வயதை அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் முற்றாக நிற்கிறது. ஆனால் காலத்திற்கு முந்தித் தானாகவே சிலருக்கு நின்றுவிடும். அல்லது சூலகங்களை அகற்றியவர்களுக்கும் நின்றுவிடும்.
- அதீத எடையுள்ளவர்கள்.
- குருதியில் சீனியின் அளவு தளும்பல் நிலையுள்ளவர்கள். அதாவது நீரிழிவின் ஆரம்ப நிலையில் (Prediabetics) உள்ளவர்கள்.
- பரம்பரையில் இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோயுள்ளவர்கள்.
- சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள்.
- தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்பவர்கள்
கொலஸ்டரோல்
மேற்கூறிய பிரச்சனையுள்ளவர்கள் தங்கள் குருதி கொலஸ்டரோல் அளவை கவனத்தில் எடுப்பது அவசியம்.
கொலஸ்டரோலில் பல உப பிரிவுகள் உள்ளன.
இவற்றில் நல்ல கொலஸ்டரோல் எனப்படும் HDLஅதிகரித்திருப்பதும், கெட்ட கொலஸ்டரோல் எனப்படும் LDLமற்றும் Triglyceride குறைந்திருப்பதும் இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை வரமால் தடுப்பதற்கு அவசியமாகும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தொடர்ந்து இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவதைத் தடுப்பது மட்டுமின்றி ஏற்கனவே படிந்திருந்தவை கரையவும் கூடும் என ஆய்வுகள் சொல்கின்றன.
குருதியில் கொலஸ்டரோல் அளவு குறைந்தவுடன் மருந்துகளை நிறுத்துவது கூடாது. தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். அதன் அளவைக் குறைக்க வேண்டுமா இல்லையா என்பதை உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
மருந்துகள்
கொலஸ்டரோலைக் குறைப்பதற்கு பலவகையான மருந்துகள் பல உள்ளன. ஆயினும் மிக முக்கியமானதும் பெரும்பாலும் உபயோகிக்கப்படுவதும் ஸ்டடின் (Statin) என்ற வகை சார்ந்த மருந்துகளே. மருத்தின் முழுப்பலன் கிடைப்பதற்கு ஸ்டடின் மருந்தை இரவில் உட்கொள்வது நல்லது எனக் கருதப்படுகிறது.
இவற்றிலும் பலவகை உள்ளன. Lovastatin , Simvastatin, Atrovastatin, Rosuvastatin ஆகியவையே இங்கு பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறன.
இந்த ஸ்டடின் மருந்துகள் யாவும் கொலஸ்டரோலைக் குறைப்பது மட்டுமின்றி உடலுக்கு மேலும் பல நன்மைகளைச் செய்வதாக ஆய்வுகள் கூறுகிற்னறன.
- கெட்ட கொலஸ்டரோல் எனப்படும் LDLயைக் குறைக்கும்.
- இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும்.
- மரணங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் குறைக்கிறது.
பரிசோதனைகள்
Lipid profileஎன்ற குருதிப் பரிசோதனையைச் செய்வதன் மூலமே உங்கள் கொலஸ்டரோல் அளவுகளைக் கணிப்பார்கள்.
12 மணி நேரம் உணவு உட்கொள்ளாதிருந்து காலையில் இப் பரிசோதனை செய்ய வேண்டும். பால், தேநீர் போன்றைவற்றையும் அந்நேரத்தில் அருந்தக் கூடாது. அயினும் வெறும் நீர் அருந்தலாம்.
பொதுவாக ஸ்டடின் மருந்துகளை ஆரம்பிக்க முன்னர் நோயளியின் ஈரல், சிறுநீரகம் போன்றவை நல்ல நிலையில் இருக்கின்றதா என அறிவதற்காக
(CK, AST,ALT)ஆகிய குருதிப் பரிசோதனைகளைச் செய்வதுண்டு.
மருந்துகளை உபயோகிப்பதால் குருதி கொலஸ்டரோல் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள குறைந்தது ஒருசில மாதங்களாவது செல்லும்.
மருந்தினால் கொலஸ்டரோலை அளவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என அறிய மூன்று மாதங்களின் பின் மீண்டும்
Lipid profileகுருதிப் பரிசோதனையை செய்வார்கள். திருப்பதியாக இருந்தால் அதன் பின்னர் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
போதிய மாற்றம் ஏற்படவில்லை எனில் மருந்தின் அளவை அதிகரித்து, அதன் பின்னர் 6 வாரங்களில் மீண்டும் செய்வார்கள்.
மருந்தினால் பாதிப்பு ஏற்படுமா?
Statinமருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. பல வருடங்களுக்கு தொடர்ந்து உபயோகிக்கக் கூடியவை. உலகம் பூராவும் பல கோடிக் கணக்கான மக்கள் வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கித்து நன்மை பெறுகிறார்கள். பக்க விளைவுகள் மிக அரிதாகவே ஏற்படுகின்றன. இருந்தபோதும் ஏதாவது பாதிப்புகள் உள்ளனவா என்பதை மருந்துவர்கள் தொடர்ந்து அவதானித்துக் கொண்டே இருப்பார்கள். பக்கவிளைவுகள் ஏற்படுமாயின் அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய இரத்தப் பரிசோதனைகள் உள்ளன.
மருந்தை உட்கொள்ளும்போது சருமத்தில் அரிப்பு, அழற்சிகள், தசைவலிகள், மூட்டு வலிகள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவருக்கு அறிவியுங்கள். ஏனெனில் இவை மருந்துகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படலாம்.
ஈரலின் செயற்பாட்டில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என அறிய AST, ALTஆகிய பரிசோதனைகள் உதவும். மருந்து ஆரம்பித்த 4 முதல் 6 வாரத்தின் பின் முதன் முறை செய்வார்கள். பாதிப்புகள் ஏதும் இல்லையெனின் அதன் பின்னர் 3 முதல் 12 மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
தசைகளிலும் சில வேளை பாதிப்பு ஏற்படலாம் ஆயினும் இதுவும் அரிதாகவே ஏற்படுகிறது. இருந்தபோதும் காரணமின்றி தசைகளில் கடும் வலி ஏற்பட்டால் மருத்துவருடன் தொடர்பு கொள்ளுங்கள். அது தசைப் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
இதைக் கண்டறியவே ஆரம்பத்தில் குறிப்பிட்ட CK- Creatine Kinase பரிசோதனை செய்யப்படுகிறது. ஆயினும் இது வழமையை லிட 5 மடங்கிற்கு மேல் அதிகரித்திருந்தால் மட்டுமே மருந்துவர் Statin மருந்தை நிறுத்தக் கூடும்.
இறுதியாக
இறுதியாகச் சொல்வதானால் கொலஸ்டரோலைக் கட்டுப்படுத்த உட்கொள்ளும் மருந்துகள் பாதுகாப்பானவை. வருடக் கணக்கில் தொடர்ந்து உட் கொள்ளக் கூடியவை. தொடர்ந்து உட்கொள்வது அவசியமும் கூட.
ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமாயின் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பரிசோதனைகள் உள்ளன. மருந்துகளால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகளை அறிய மட்டுமின்றி பாதிப்புகள் ஏற்படுகின்றனவா எனக் கண்காணிக்கவுமே 3 முதல் 6 மாத இடைவெளிகளில் மருத்துவர் உங்களைக் காண விரும்புகிறார்.
எனவே அவர் சொல்லும் காலக் கிரமத்தில் அவரைச் சந்தித்து உங்கள் உடல் நலத்தை பேணிக் கொள்ளுங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0