Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

டெங்கு மீண்டும் கோர முகத்தைக் காட்டுமா?

$
0
0
டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக் கூடும் என நம்புகிறேன்;.


இரு வாரங்களுக்கு முன் எழுதிய தற்போது பரவும் தொற்று நோய்கள் என்ற கட்டுரையில் டெங்கு பற்றி சுருக்கமாக சொல்லியிருந்தேன். இது சற்று விரிவான கட்டுரையாகும்.

டெங்குப் பரவல்

இவ்வருட தை மாசி மாதங்களில் பல உயிர்களைப் பலி கொண்ட டெங்கு அதன் பின் சற்றுத் தணிந்திருந்தது. ஆயினும் மறையவில்லை. கடும் மழை கொட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் டெங்கு சற்றுக் குறையும். நுளம்புக் கூம்பிகள் ஓடும் நீரில் அள்ளுப்பட்டுச் சென்றுவிடும். மழை சற்றுக் குறைந்து வெயிலும் சேரும்போது தேங்கி நிற்றும் நீர்நிலைகளில் நுளம்பு பெருகும். அப்போதுதான் டெங்கு தன் கோர முகத்தைக் காட்டும்.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் டெங்கு எனச் சந்தேகிக்கப்பட்ட 16526 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.  தரவுகளை ஆயும்போது கொழும்பு மாவட்டத்தில்தான் மிக அதிகமான அளவில் (மொத்தத்தில் சுமார் 25 சதவிகிதம்) நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அடுத்து குருநாகல் மாவட்டம், மூன்றாவது இடத்தை கம்பஹா மாவட்டம் பிடித்தது.

Thanks: -www.thesundayleader.lk

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 400 ற்று மேற்பட்டிருக்க, கிளிநொச்சியில் மிகக் குறைந்த எண்ணிக்கையான 32 மட்டும் இனங் காணப்பட்டனர். வவுனியா 47, மன்னார் 56, முல்லைத்தீவு 83, திருகோணமலை 149. கிளிநொச்சி டெங்கு நோயாளர் மாவட்டத்தில் குறைவாக இருப்பதற்கு சன அடர்த்தி குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஏனெனில் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti)நுளம்பினால் நீண்ட தூரம் பறக்க முடியாது. மொத்த டெங்கு நோயாளர்களில் 43.4 சதவிகிதம் மேல் மாகாணத்தில் இருப்பதற்கு சன நெருக்கடியே காரணமாகிறது.

டெங்கு அறிகுறிகள்

பிள்ளைகளுக்கு காய்ச்சல் என்று கண்டவுடன் பெற்றோர்கள் பயந்தடித்துக் கொண்டு மருத்துவர்களை நாடி ஓடுகிறார்கள். அவர்களது பயம் அர்த்தம் அற்றது அல்ல. பத்திரிகைகளில் வரும் செய்திகளும் பாடசாலை மாணவர்களில் ஏற்படும் மரணங்களும் பீதியை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் பல வருடங்களாக டெங்குவுடன் வாழ்ந்த நாம் இது டெங்குவா இல்லையா என அனுமானிக்கப் பழக வேண்டும்.

பெரும்பாலான ஏனைய காய்ச்சல்கள் தடிமன், மூக்கடைப்பு, தும்மல் தலையிடி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வரும். காய்சலும் 100 - 101 றைப் பெரும்பாலும் தாண்டாது. வேறு சில வாந்தி வயிற்றோட்டத்துடன் வரும். இன்னும் சில சிறுநீர் கழிக்கும்போது எரிவைக் கொடுக்கும். இத்தகைய அறிகுறிகள் கடுமையாக இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரிடம் ஓட வேண்டியதில்லை

ஆனாலும் டெங்கு காய்ச்;சலில் முற்கூறிய அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் ஆரம்பத்திலேயே காய்ச்சல் மிகக் கடுமை 104 – 105 எனக் கடுமையாக இருக்கும். பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கும். கண்ணுக்குப் பின் குத்துவது போன்ற தலையிடியும் இருக்கும்.


உங்கள் குழந்தை இவ்வாறு கடுமையான காய்ச்சலுடன் துடியாட்டம் இன்றிப் சோர்ந்து படுத்துவிட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரைக் காண்பது அவசியம்.

குழந்தைகள் உள்ளவர்கள் வீட்டில் ஒரு டிஜிட்டல் தேர்மாமீற்றர் வைத்திருப்பது நல்லது. மேர்கியூரி தேர்மோமீற்றர் போல இது விரைவில் உடையாது. மேர்கியூரியின் நச்சுத் தன்மையும் கிடையாது. எனவே விலை சற்று அதிகமானாலும் குழந்தைகள் உள்ளவர்கள் இதை வைத்திருப்பது உசிதமானது.

மருத்துவர் வேறு அறிகுறிகளும் இருக்கிறதா என பார்ப்பார். கண்கள் சிவந்திருக்கிறதா, தோல் செம்மை பூத்திருக்கிறதா, நாடித் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது போன்றவற்றை அவதானிப்பார்.


டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் Full blood count, Dengue antigen ஆகிய பரிசோதனைகளையும் மருத்துவர் மேற் கொள்ளக் கூடும். இருந்தபோதும் Dengue antigen பரிசோதனை விலை கூடியதும் எல்லா இடங்களிலும் செய்வது இயலாததும் ஆகும்.

எவ்வாறாயினும் 3ம் நாள் Full blood count (FBC)பரிசோதனையை செய்வது அவசியம். இவை குருதியில் வெண் கலங்களின் எண்ணிக்கை அளவு, வெண்குருதி சிறுதுணிக்கை அளவு மற்றும் Pஊஏ போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக நோயின் நிலையைக் கணிக்க அவசியமாகும்.

டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் அது டெங்குக் காய்ச்சல் என்பது உறுதிதான். ஆனாலும் அது ஆபத்தாகுமா. நிச்சயம் சொல்ல முடியாது.

டெங்குவின் வகைகள்

ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.

சாதாரண டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். 50 சதவிகிதமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும். எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படாது.

மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இது சாதாரண சிகிச்சைகளுடன் குணமாகும். பரசிட்டமோல், கொத்தமல்லி, பப்பாசிச் சாறு போன்ற எதைக் கொடு;த்தாலும் மாறிவிடும். கொடுக்காவி;ட்டாலும் மாறும். ஏனெனில் அது மாறுவது மருந்தால் அல்ல. அந்த நோயின் இயல்பாக தன்மையால்தான்.

மிகவும் ஆபத்தானது போன்று பயமுறுத்தும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலானது அவர்களில் சுமார் 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே வரும். கண்களில் இரத்தக் கசிவு, மூக்கால் இரத்தம் வடிதல், வாந்தியுடன் இரத்தம் போன்ற பயங்கரமான அறிகுறிகள் இருந்தாலும் இவர்களில் 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். தப்பிவிடுவார்கள்.



மிக ஆபத்தானது டெங்கு அதிர்ச்சி நிலையாகும். இவர்கள் மிகக் குறைந்த 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வரும். இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

நவீன சிகிச்சையில் உடலின் திரவ நிலையை சரியான அளவில் பேணுவதே முக்கியமானது. வெளியேறும் சிறுநீரின் அளவைக் கண்காணித்து அதற்கேற்பவே நீராகாரம் முதல் நாளம் ஊடான திரவம் கொடுப்பது வரை கொடுப்பார்கள்.

இந்த அதிர்ச்சி நிலையானது காய்ச்சல் தணியும் நிலையிலேயே வெளிவரும். எனவே காய்ச்சல் தணிந்த போதும் நோயாளியின் பொதுவான உடல் நிலை திருப்தியாக இல்லாவிடின் மருத்துவரைக் காண வேண்டும்.

கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கடுமையான சோர்வு, உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல், சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த பின்னரும் இருந்தால் அது ஆபத்தாகலாம்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

சாதாரண காய்ச்சல் வந்த உடனேயே மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை. மேலே கூறிய அறிகுறிகளை வைத்து இது டெங்குவாக இருக்குமோ எனச் சந்தேகித்தால் மட்டும் மருத்துவரைக் காணுங்கள்.


காய்ச்சல் மற்றும் உடல் வலியைத் தணிக்க பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது. அளவிற்கு மீறிய பரசிற்றமோல் ஈரலைப் பாதிக்கும்.

பரசிற்றமோல் மருந்தைச் சரியான அளவில் கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை எனில் Dengue antigen   பரிசோதனை செய்வது உதவக் கூடும். இப் பரிசோதனையானது காய்ச்சல் ஆரம்பித்த முதல் 24 மணிநேரத்திற்குள் மட்டுமே சரியான முடிவைக் கொடுக்கும்.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.காய்ச்சல் கடுமையாக இருந்தால் இளம் சூட்டு நீரால் ஸ்பொன்ஞ் பண்ணுவது குழந்தைக்கு இதமாக இருக்கும்.

ஓய்வு மிக முக்கியமானது. பரீட்சை வருகிறது, டான்ஸ் பயிற்சி, வெளியூர்ப் பயணம் என்றெல்லாம் சொல்லி கடுமையான மருந்துகளைக் கொடுத்து வேலைக்கோ பாடசாலைக்கோ அனுப்ப முயற்சிக்க வேண்டாம்.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

சிறுநீர் வழமைபோலப் போகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். மிகக் குறைவாக வெளியேறுவதுடன் கடுமையான தாகம் இருந்தால் அதை மருத்துவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் FBC இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். முதல் நாளிலிலேயே செய்ய வேண்டியது ஏன், எப்போது என்பது பற்றி ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படுமாயின் தினமும் ஒரு தடவையோ இரு தடவைகளோ செய்ய வேண்டி நேரலாம்.

டெங்கு ஏற்படுத்தும் வைரஸ் கிருமியானது நோயளியின் உடலில் சுமார் 5 நாட்களுக்கு. ஆனால் கடுமையான தாக்கம் 4வது அல்லது 5வது நாளிலேயே உச்ச நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அந்நேரத்தில் நோயாளியின் இரத்தக் குழாய்கள் பாதிப்புற்று இரத்தம் அல்லது இரத்தப் பாயம் (plasma) குழாய்களை விட்டு வெளியேறுவதாலேயே ஆபத்து ஏற்படுகிறது.

சிவத்த நிறமுடைய பானங்களையோ உணவுகளையோ கொடுப்பதைத் தவிருங்கள்.

ஆபத்தும் தடுப்பும்

ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள், கொழுப்பான உடல் வாகை உடையவர்கள், கர்ப்பணிகள் ஆகியோரில் இது ஆபத்தாக மாறும் சாத்தியம் அதிகம். அவர்களது காய்ச்சலானது டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் சற்றும் தாமதப்படுத்தாது தீவிர கவனிப்பிற்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும்.


டெங்கு பரவாது இருக்க நுளம்பு பரவுவதைத் தடுக்க வேண்டும். அரசு செய்யும், மாநகரசபை செய்யும் என நாம் வாளாதிருக்க முடியாது. எமது வீட்டை, எமது சுற்றுச் சூழலை, எமது பாடசாலைகளை, எமது தொழிலகங்களை நுளம்பு இல்லாத இடங்களாக மாற்றுவதில் எமது பங்கு பெரிது என்பதை மறக்க வேண்டாம்.


அவ்வாறு நுளம்பு பெருகுவதைத் தடுத்தால் டெங்கு தனது கோர முகத்தைக் காட்ட முடியாது முடங்கி அடங்கிவிடும்.

டெங்கு பற்றிய முன்னைய பதிவுகள்
டெங்கு நோய் சிகிச்சையில் புதிய அணுகுமுறை பப்பாசி உதவுமா?

டெங்கு நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்

டெங்கு காய்ச்சலா? எப்படி அறிவது?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>