Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

குளோனிங் ஆரவாரங்களும் சவால்களும் - குளோனிங் நாய் குட்டிகள்

$
0
0

அந்தக் குழந்தைக்கு சில நாட்களாகப் பசியில்லை, உற்சாகமில்லை, விளையாடுவதில்லை. எதையோ பறிகொடுத்ததான சோகத்தில் மாய்ந்து கிடந்தது.

இரவில் கண்விழித்தெழுந்து 'ரெமி ரெமி' கத்துகிறது. பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. எவ்வாறு தமது குழந்தையை அமைதிப்படுத்துவது, தூங்க வைப்பது எப்படி, உண்ண வைப்பது எவ்வாறு எனப் புரியாது அல்லலுறுகிறார்கள்.


ஆம் ரெமி அவர்களது வளர்ப்பு நாய். நாய் என்று சொன்னால் கோபிப்பார்கள். தமது இரண்டாவது குழந்தை போல வளர்த்தார்கள். திடீரென நோய்வாய்ப்பட்டது. மிருக வைத்திய நிபுணர் வந்து ஊசி போட்டு, சேலைன் ஏற்றி முழு முயற்சி செய்தார். முடியவில்லை. அவர்களது இரண்டாவது குழந்தையும், அந்தப் பிள்ளையின் சகோதரமும் ஆன ரெமி இப்பொழுது இல்லை.

பிரிவுத் துயரில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் குழந்தைக்கு அதே ரெமியை மீண்டெடுத்துக் கொடுக்க முடியுமா?

ஒரு இலட்சம் அமெரிக்க டொலரைத் தாருங்கள் (சுமார் 66,000 பவுண்ட்ஸ்) தாருங்கள். நாய்குட்டியைத் தருகிறேன் என்கிறார் Insung Hwang  என்பவர். நாய் மரணிப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்பாகக் கொடுக்க வேண்டும்.

யார் இவர்? தென் கொரியாவைச் சார்ந்த ஒரு விஞ்ஞானி. அங்குள்ள Sooam Foundation  என்ற நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்த நிறுவனம் மற்றொரு விஞ்ஞானியான Hwang Woo-Suk  என்பவரால் நடாத்தப்படுகிறது. 2006ம் ஆண்டின் மனித குளோனிங் பிரச்சனையோடு தொடர்புடையவர்.


ஒரு கோடி ரூபாய் என்பது எங்களில் பலருக்கு மிகப் பெரிய தொகை. விஜய் ரிவீயின் வெல்லுங்கள் ஒரு கோடி நிகழ்ச்சியில் மட்டும் அந்தத் தொகையைக் காணக் கிடைத்திருக்கும்.

ஆனால் கோடிகளில் தவளும் பல அமெரிக்கர்களுக்கு அது சுளுவான காசு. சென்ற வருடம் அதாவது 2012ல் 12 நாய்க் குட்டிகளை இவரது அமெரிக்க நிறுவனமான Insung Hwang's laboratory  தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இவை யாவும் இறக்கவிருந்;த அவர்களது நாய்களின் திசுக்களைக் கொண்டு குளோனிங் முறையில் பிறந்த நாய்க் குட்டிகளாகும்.

ஜல்லிக் கட்டு நாம் எல்லோரும் அறிந்த விளையாட்டு. காளைச் சண்டையில் பிரசித்தமான மற்றொரு நாடு ஸ்பெயின் ஆகும். அங்குள்ள 16 வயதான Alcalde என்ற காளை பல காளைகளை வென்று பெரும் புகழ் பெற்றதாகும். அதன் உரிமையாளரான Victoriano del Río  சுமார் 400 காளைகளை தனது பண்ணையில் வளர்த்து போட்டிக்கு விடுபவர். இருந்தபோதும் Alcalde யின் ஆற்றலில் அவருக்கு அபார நம்பிக்கை உள்ளது. வயதாகும் அதன் ஆற்றலை என்றென்றைக்கும் பேணுவதற்காக குளோனிங் செயன்முறையை இப்பொழுது நாடியுள்ளார்.


ஆம் பண்பாடு, ஆன்மிகம், தொழில் நெறி போன்றவற்றின் அடிப்படையிலான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்தபோதும் மிருகங்களை குளோனிங் முறை மூலம் உருவாக்கம் செய்கின்ற விஞ்ஞான தொழில் முறை ஆர்ப்பாட்டமில்லாமல் எமது வாழ்வில் நுழைந்துவிட்டது.

குளோனிங்

குளோனிங் என்பது என்னவென அறியாதவர்கள் இப்பொழுது இருக்க முடியாது. டொலி என்ற ஸ்கொட்லன்ட் ஆட்டுக் குட்டியின் வரவிற்குப் பின்னர் அது உலகளாவிய ரீதியில் பிரபலமாகிவிட்டது.

ஆனால் குளோனிங் என்பது ஒரு மிருகத்தின் அல்லது உயிரனத்தின் அச்சுப் போன்ற பிரதியை உருவாக்குகிற உயிரியல் விஞ்ஞான தொழில் நுட்பம் என்றே பலரும் கருதுகிறார்கள். அதாவது மரபியில் ரீதியாக மூல உயிரினத்தின் பிரதிமையை ஏற்படுத்துவதாகும்.

சற்று விரிவான தளத்தில் குளோனிங் என்பதை உயிரியல் நகலெடுத்தல் எனச் சொல்லலாம். இதில் மூன்று முக்கிய வகைகள் உண்டு.


  • மரபணு குளோனிங் - ஒரு உயிரினத்தின் ஒரு மரபணுவை மட்டும் அல்லது டிஎன்ஏ(DNA) யின் ஒரு பகுதியை மட்டும் பிரதிகள் எடுப்பதாகும். 
  • இனப் பெருக்கத்திற்கான குளோனிங் இது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு மிருகத்தை அல்லது வேறு உயிரினத்தின் முழுமையான பிரதிமையை உருவாக்கல்.
  • சிகிச்சை முறையான குளோனிங் - இது உடலிலுள்ள மூலக் கலங்களான ஸ்டெம் செல்ஸ் மூலம் ஒருவரது உடலிலுள்ள பழுதடைந்த கலங்களுக்குப் பதிலாக அதேபோன்ற அச்சொட்டான ஆரோக்கியமான கலங்களை உருவாக்குவதாகும். உதாரணமாக நீரிழிவு நோயாளரில் பீட்டா செல்சை உருவாக்கும் முயற்சியைச் சொல்லலாம்.


இனப் பெருக்கத்திற்கான குளோனிங் 

இது எவ்வாறு செய்யப்படுகிறது?

குறிப்பிட்ட நாய் இறப்பதற்கு முன்னரான 5 நாட்களுக்குள் அந்த நாயிலிருந்து திசு மாதிரிகளை எடுத்து உறைய வைக்கிறார்கள். ஆய்வுகூட சேமிப்பறையில் ஏற்கனவே இருக்கும் இதனோடு எந்தவித தொடர்புமற்ற வேறொரு பெண் நாயிடமிருந்து பெறப்பட்ட முட்டையில் இணைக்கிறார்கள்.


அதனது டிஎன்ஏ யை முழுமையாக அப்புறப்படுத்திய பின்னர் வளர்ப்பு நாயின் டிஎன்ஏ யை மாற்றீடு செய்கின்றனர். இவ்வாறு பெறப்பட்ட கருமுளையை பின்னர் ஒரு வாடகை நாய்த் தாயின் கருப்பையில் வைத்து இயற்கையாக வளரச் செய்வார்கள். காலகதியில்  நாய்க்குட்டி பிறக்கும். ஒரு மாதமாகும் வரை குட்டியானது வாடகைத் தாயின் பாலைக் குடித்து வளரும்.

குளோனிங் செய்யப்பட்ட கருவைச் சுமக்கும் தாய் நாயானது அதே இனத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமல்ல. இருந்தபோதும் ஒத்த அளவுள்ள இனங்களிலிருந்து தேர்வு செய்தார்கள். பொதுவாக ஒரு குட்டி கிடைக்கும். ஆனால் சில தருணங்களில் அதே மாதிரியான  இரண்டு மூன்று குட்டிகள் கிடைப்பதுண்டு. அவ்வாறு கிடைத்தால் ஓடர் கொடுத்த வாடிக்கையாளர் அவை அனைத்தையும் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்று விடுவார்கள் என ஐளெரபெ ர்றயபெ மகிழ்வோடு சொல்கிறார்.

குளோனிங் சவால்கள்

"..பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல்
காத்து வளர்த்தார்.."



எனப் படிக்காத மேதையில் ஒரு பாடல் வருகிறது. ஆம் பலர் தமது பிள்ளையை விடத் தமது வளர்ப்பு மிருகத்திலேயே அதிக பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்பு மிருகங்கள் அவற்றை வளர்ப்போரின் உணர்வோடு ஒன்றியவை.

தமயந்தியின் அன்னம், சீதையின் மான் போன்ற ஒரு சில குறிப்புகள் தவிர தமிழ் இலக்கியத்தில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான உறவு பற்றி அதிகம் பேசப்பட்டதாக தெரியவில்லை.

ஆனால் மேலை நாட்டு இலக்கியங்களில் குதிரைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவு பற்றிய அருமையான படைப்புகள் உள்ளன. ஐத்மதேவ் குல்சாரியில் மிக அற்புதமாக அந்த உறவின் ஆழத்தைச் சொல்லியிருக்கிறார். மகனுடன் இருக்கப் பிரியப்படாது தனது கிராமத்திற்கு தனது குதிரையுடன் பயணப்படுகிறார் ஒரு வயோதிபர். வழியில் அது நோய்வாய்ப்படுகிறது. இறந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஏங்குகிறார். அதற்கும் தனக்கும் இடையேயான உறவின் நினைவுகளில் மூழ்குகிறார்.

இன்று மேலை நாடுகளில் நாய் பூனை போன்றவற்றிக்கு அப்பால் முதலை ஈறான மிருகங்களையும் நேசத்தோடு வளர்க்கிறார்கள். குடும்ப உறவுகள் முறிந்து தனிமையில் வாழும் அவர்களுக்கு அதற்கான தேவை எம்மைவிட அதிகமாகவே இருக்கிறது எனத் தோன்றுகிறது. அவற்றில் அதீத பாசம் வைத்திருக்கிறார்கள்.

அவ்வாறு பாசம் வைத்திருப்பவர்களிடம் தமது பாசத்திற்கு உரிய மிருகம் மரணத்தை நெருங்கும்போது குளோனிங் குட்டியை நாட முடியும். போதிய பண வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அவர்களது எதிர்பார்புகள் எவ்வாறு இருக்கும்?

குளோனிங் முறையில் கிடைப்பது தமது ஒரிஜினல் வளர்ப்பு மிருகம் போலவே நிறத்திலும் பார்வையிலும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். உணவு விருப்பங்கள், தங்களுடனான உறவு நெருக்கம் போன்ற அதனுடைய பழக்க வழங்கங்களும் அசலானதைப் போலவே இருக்க வேண்டும் என அவாவுவார்கள். அத்தோடு அதைப் போன்ற குணநலங்களும் உள்ளதாக இருப்பதையே நாடுவார்கள்.

ஒத்த இரட்டையர் போன்றது

குளோனிங் குட்டி முற்று முழுதாக அசலை ஒத்ததாகவே இருக்குமா?


  • "அது ஒருபோதும் உங்களது அசலான வளர்ப்பு மிருகமாகவோ அதன் அச்சொட்டாக இருக்க முடியாது. 100% அவ்வாறு இருப்பது சாத்தியமல்ல. குளோனிங்கில் கிடைப்பது ஒத்த இரட்டையர் போலவே இருக்கும்" என்கிறார் Hwang.  ஆனால் வெள்ளையில் கரும் புள்ளிகள் உள்ள டல்மேசியன் இனத்தில் புள்ளிகள் அச்சொட்டாக இருப்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அத்தகைய தெளிவான அடையாளங்கள் இல்லாத ஏனைய இனங்களில் வேறுபாடுகளை இனங் காண்பது சிரமம் என்கிறார்.

'வாடிக்கையாளர்களும் அவ்வாறான தூய இனங்களை விட கலப்பு இன நாய்களில் குளோனிங் இனங்களையே வேண்டுகிறார்கள்' என்றார். காரணம் தெளிவாகவில்லை.

  • "அவற்றின் இயல்பான பண்பு உளப் பாங்கு அசலானது போல இருக்காது" என்பதையும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் சில வாடிக்கையாளர்கள் அவை ஒத்த குணமுள்ளதாக இருந்ததாகச் சொல்லி மகிழ்ந்தார்களாம். உதாரணமான உணவைக் கோப்பையில் போட்டால் அவை இரண்டுமே உணவை கோப்பையிலிருந்து எடுத்துச் சென்று சில மீற்றர் தூரத்தில் வைத்தே உண்டதாகச் சொன்னார்களாம்.


வெற்றி விகிதம்

தாங்கள் 2005ல் இந்த குளோனிங்  முறையை ஆரம்பித்தபோது 2 சதவிகித வெற்றி மட்டுமே கிடைத்ததாம். இப்பொழுது அது 30 சதவிகிதமளவற்கு அதிகரித்துள்ளதாம். இற்றை வரை IVU (டெஸ் டியூப் குழந்தை) முறையில் குழந்தை பெறுவதில் கூட இந்தளவு வெற்றி இல்லையே என ஆச்சரியப்பட்டேன்.

அவர்களது அறிக்கையை நுணுகி ஆய்ந்தபோது விடை கிட்டியது. இவர் சொன்ன வெற்றி வீதம் என்பது குட்டிகள் கிடைப்பது பற்றியது அல்ல. அது கர்ப்ப விகிதம் (pregnancy rate)  அதாவது கருமுளையத்தை கருப்பையில் வைத்தபோது அது கர்ப்பமாக உருவெடுத்தமை பற்றியது. கருவான பின் எத்தனை கருச் சிதைவுகள் ஏற்பட்டன. காலத்திற்கு முந்திப் பிறந்து அழிந்தவை எத்தனை. நோயோடு பிறந்து இறந்தவை எத்தனை போன்றவை பற்றி அவை பேசவில்லை.

உலகளாவிய ரீதியில் குளோனிங் முறையின் வெற்றிவிகிதம் 0.1 முதல் 3 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக பரவலான அறிக்கைகள் கூறுகின்றன. இதை சற்றுத் தெளிவாக இவ்வாறு கூறலாம். ஆயிரம் தடவைகள் முயற்சி செய்தால் 1 முதல் 30 குளோனிங் குட்டி உருவாகவாம். மீதி 970 முதல் 999 வரை அழிந்து போகின்றன.

தோல்வி விகிதம் ஏன் அதிகம்

தோல்வி விகிதம் குளோனிங்கில் இவ்வாறு அதிகமாக இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.

  • இச் சிகிச்சை முறையின் முதற்படியானது சேமிப்பிலிருந்து முட்டையின் டிஎன்ஏ யை முழுமையாக அப்புறப்படுத்தி மரணிக்க இருக்கும் மிருகத்தின் டிஎன்ஏ யை வைப்பதாகும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஏற்புடையதாக இல்லாதவிடத்து அது முட்டைக் கலத்தால் நிராகரிகப்பட்டு அழிந்து விடும். புதிதாக மாற்றப்பட்ட கருவானது ஏற்புடையதாக இருந்தாலும் அம் முட்டை பிரிந்து பல கலங்களாக வளர்வதில் சிக்கல் ஏற்பட்டு அழிந்து போகலாம். 
  • அதை மீறி வளர்ந்தாலும் கருமுளையை வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கும்போது அது பொருந்தி வளர மறுத்துச் சிதைந்துவிடலாம். 
  • இவை யாவும் சரியானாலும் தெரியாத காரணங்களால் கர்ப்பம் சிதையலாம்.

பிறந்த பின்னும் பிரச்சனைகள்


  • பிறந்தாலும் சில தருணங்களிள் குட்டிகள் வழமையை விட மிக பெரிய அளவில் பிறக்கின்றன. இதை விஞ்ஞானிகள் Large Offspring Syndrome  என்பார்கள். 
  • உருவத்தில மாத்திரமின்றி உள்ளுறுப்புகளும் பெரிய அளவில் இருக்கலாம். 
  • இதனால் அவற்றிற்கு சுவாசப் பிரச்சனை, குருதி ஓட்டத்தில் பிரச்சைனை போன்றவை ஏற்பட்டு இறந்து போகின்றன. 
  • வேறு சிலவற்றிக்கு மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் குறைபாடு இருப்பதுண்டு. இன்னும் சிலவற்றிற்கு நோயெதிர்பு வலு குறைவாக இருந்து வாழ முடியாது இறந்து போகின்றன.


இக் காரணங்களால்தான் குளோனிங் முறையை இன்னமும் விவசாயத் துறையிலோ மிருக வளர்ப்புத் துறையிலோ பெரிய அளவில் செயற்படுத்த முடியவில்லை.

மேற் கூறிய தனியார் நிறுவனம் போன்ற அமைப்புகள் இறந்த வளர்ப்பு மிருகங்களை ஒத்த குளோனிங் குட்டிகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் உள்ளதே பெரிதாகப் பேசப்படுகிறது.

குளோனிங்கின் எதிர்காலம்

உண்மையில் குளோனிங் என்பது ஒரு பெரிய அற்புதமான விஞ்ஞான முன்னேற்றமாகவே தெரிகிறது இருந்தாலும், அதை நடைமுறை வாழ்வில் பயன்படுத்த தெளிவான வெற்றிகரமான நடைமுறைகள் இன்னமும் தென்பட இல்லை.

குளோனிங் முறையில் முழு விலங்குகளை உற்பத்தி செய்வது அதீத விளம்பரங்களையும் புகழையும் திடீரெனக் கொண்டுவரலாம், ஆனால் அதுவும் 100 விகிதம் சாத்தியமல்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒரிரு வெற்றிகள் பேசப்படும்போது ஆயிரக்கணக்கான அழிவுகள் கண்டு கொள்ளப்படுவதில்லை.

ஆனால் மற்றொரு கிளை வழியில் அது பெரு வெற்றி தரக் கூடும். இப்போது, ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் நம்பிக்கைக் கூறுகள் தென்படுகின்றன. குளோனிங் முறையில் நோயால் சிதைந்த உடல் பாகங்களுக்கு பதிலாக புதிதானவற்றை  ஸ்டெம் செல் ஊடாக உருவாக்குவதில் அக்கறை காண்பிக்கப்படுகிறது.

குளோனிங் அறிவியலானது இப்போது ஸ்டெம் செல் ஆய்வுகள் நோக்கி விரைவது அதன் செயலாற்றலை மேம்படுத்தி மானிடத்தின் செழுமைக்கு கைகொடுக்கும் என நம்பலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0


Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>