Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுக்கலாமா? எப்போது?

$
0
0

கேள்வி:- வணக்கம் டொக்டர். எனக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கின்றாள்.    அவள் அழும்போதெல்லாம் ஸ்மார்ட் போனைக் கொடுத்தால் அழுகையை நிறுத்திவிடுவாள். அதுவே என் மகளுக்கு இப்போதும் பழக்கமாகிவிட்டது. இப்போது 3 வயதுதான் ஆகிறது. ஆனால் பெரியவர்கள் போல போனும் கையுமாக இருக்கின்றாள். நாங்களும் அந்தப் பழக்கத்தில் இருந்து அவளை மீட்க முயற்சிக்கின்றோம்.  முடியவில்லை. நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும்.  ஏ. அமுதா யாழ்ப்பாணம்



பதில்:- குழந்தையை ஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து மீட்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். 
ஆனால் அதற்கு முதல் இப் பழக்கத்தால் குழந்தைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் எவை என்பதை அறிவது முக்கியமாகும். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் கொடுப்பதானது கொகெயின் கொடுப்பதற்கு சமன் என்கிறார் ஒரு சிகிச்சையாளர். உண்மைதான் மோசமான போதை அதற்கு அடிமையாவது.
குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போனைக் கொடுத்தால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் குழந்தையின் பேச்சு ஆற்றல் விருத்தியடையும் காலம் இது. ஸ்மார்ட் போனில் மூழ்கி இருக்கும் குழந்தைகளின் பேச்சு ஆற்றல் விருத்தியடைவது தாமதம் அடையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சொல்லாற்றல் குறைவதுடன் அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது குறைந்துவிடும்
அதே போல அவர்களது எழுத்து ஆற்றலும் பாதிக்கப்படும். விரல் நுனிகளால் போனைத் தட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களது விரல்களை வளைத்து எழுத்துக்களை உறுப்பாக எழுதுவதில் ஆர்வம் விட்டுப் போய் எழுதும் ஆற்றல் பாதிக்கப்படும்.
குழந்தைகளுக்கு தூக்கம் பெரியவர்களைவிட அதிக நேரம் தேவை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் ஸ்மார்ட் போனில் ஆர்வம் கொண்டு அதில் நேரத்தை செலவழிக்கும் குழந்தைகள் தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறதாம். அண்மைய ஆய்வு முடிவுகளின்படி குழந்தை ஒரு மணிநேரம் ஸ்மார்ட் போனில் செலவிட்டால் 15 நிமிடங்கள் தூக்கம் குறைகிறதாம்.
இவற்றை விட, ஸ்மார்ட் போனில் பார்க்கும் விடயங்களால் உடலியல் மற்றும் உளவியில் தாக்கங்களும் குழந்தைக்கு ஏற்படுகிறது. 
ஸ்மார்ட் போனில் இருந்து நீலக் கதிர் வீச்சு ஏற்படுகிறது. நீலக் கதிர்களால் உடற் கடிகார இயங்கங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது தூங்கும் நேரம் விழித்தெழும் நேரம் போன்ற எமது நாளாந்த செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் அந்தக் கதிர்கள் கண்களினுள் ஆழப் புகுந்து நுண்பார்வைக்கு முக்கியமான மக்கியூலா பகுதியை பாதிக்கும் (ஆயஉரடயச னநபநநெசயவழைn).  இது குணப்படுத்த முடியாத பாதிப்பு ஆகும்.
கிருமித் தொற்று நோய்கள் குழந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. ஏனெனில் 90 சதவிகிதத்திற்கு மேலான போன்களில் கிருமி பரவியிருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
குழந்தையை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு நீங்கள் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்னவெனில் நீங்கள் முன்மாதிரியாக இருப்பதுதான். நீங்கள் ஸ்மார்ட் போன் பாவனையை கட்டுப்படுத்து அவசியம். முக்கியமாக குழந்தையின் கண்பார்வை படும் இடத்திலிருந்து பாவிக்க வேண்டாம். அதில் அழைப்பு வந்தால் அதற்கு மறுமொழி கொடுத்துவிட்டு உடனடியாகவே அதை குழந்தையின் கைபடாத இடத்தில் வைத்து விடுங்கள்.



நீங்கள் ஸ்மார்ட் போனில் நோண்டிக் கொண்டிருப்பது குழுந்தையின் கவனத்தை ஈர்த்து, அதன் ஆவலைத் தூண்டி குழந்தையையும் அதில் கைபோட வைக்கும். இந்த விடயத்தில் பெற்றோர் முன்மாதிரியாக இருப்பது அவசியம். அத்துடன் பெற்றோர் ஸ்மார்ட் போனில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பதானது குழந்தை தான் அலட்சியப்படுத்தப் படுவதான உணர்வைக் கொடுத்து அதை ஏக்கமடையச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தையுடன் பேசுவது, அதற்கு விருப்பமான கதைகளைக் கூறுவது, அதனுடன் சேர்ந்து விளையாடுவது, அதன் வயதிற்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள்.
குழந்தையை வெளியே அழைத்துச் செல்வதும், அதன் வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையும் உங்கள் குழந்தையின் கவனத்தை ஸ்மார்ட் போனிலிருந்து விடுவிப்பதற்கு உதவும்.
பொதுவாக இரண்டு வயதுவரை குழந்தைகள் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பழகிப் புரிந்து கொள்ள வேண்டிய காலம். பெற்றோருடனும் மற்றவர்களுடனும் ஊடாட வேண்டிய காலம். ஸ்மார்ட் போன் ஆகவே ஆகாது. மூன்று வயதில் அவர்கள் ஸ்மார்ட் போன் ஊடாக சிலவற்றைக் கற்கக் கூடிய காலம். கண்காணப்போடு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் ஸ்மார்ட் போனைக் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைக்கு என சொந்தமாக ஒரு ஸ்மார்ட் போன் எப்போது கொடுக்கலாம்?. பதினொரு வயதிற்கு மேலேயே நல்லது என 2017 வந்த ஒரு ஆய்வு கூறியது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.00.0


Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>