Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

புதையுண்ட தோட்டுச் சுரை

$
0
0
 "இவளின்ரை தோடில்லோ காணமல் போச்சு.."

இவ்வாறு சொன்னவர் நான் அவளது காதைப் பார்ப்பதை அவதானித்து விட்டு, "மனிசர்தான் புதைகுளிகளுக்குள் காணாமல் போகினம் என்று பார்த்தால் இவளின்ரை தோட்டுச் சுரையும் புதைஞ்சு போட்டுது"என்றார்.

அவர் பேச ஆரம்பித்தபோது  "இரண்டு பக்கமும் காதிலை தோடுகள் கிடக்குத்தானே"என்று  நினைத்த நான் இப்பொழுது அவளது காதுகளின் பின்புறத்தை ஆராய வேண்டி நேர்ந்தது.


வலது புறக் காதில் தோடும் சுரையும் வழமை போலத் தோற்றமளித்;தன. ஆனால் இடது புறத்தில் தோடு ஜோராக மினுங்கிக் கொண்டிருந்த போதும் பின் புறத்தில் தோட்டுச் சுரை இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவில்லை. தோல் மட்டும் வழுவழுப்பாக ஆனால் சற்று மிதந்து கிடந்தது. தொட்டுப் பார்த்தபோது சருமத்தின் உள்ளே தோட்டுச் சுரை புதைந்து கிடப்பதை உணரக் கூடியதாக இருந்தது.

அணிகலங்கள்

மனிதர்களுக்கு தாங்கள் அழகாக இருக்க வேண்டும், மற்றவர்களை கவர்ந்து இழுக்க வேண்டும் என்பதில் ஆதிகாலம் முதற்கொண்டு ஆர்வம் இருந்திருக்கிறது.

காதில் தோடு, மூக்கில் மூக்குத்தி, கழுத்தில் மாலை, காலில் சலங்கை, கைகளில் வளையல்கள் விரல்களில் மோதிரம் .எனச் சொல்லிக் கொண்டே போகலாம். நெற்றியில் பொட்டும் இதில் அடங்கும்.

அழகைக் கொடுத்து, மற்றவர்களைக் கவர்ந்து, அணிந்தவர்களை உவக்க வைக்கும் இவை சில தருணங்களில் நோய்களை விதைத்து வேதனையில் உழல வைப்பதும் உண்டு.

அணிகலங்கலால் ஏற்படும் பிரச்சனைகள் பலவாகும்.

காது மற்றும் மூக்கு குத்திய இடங்களில் கிருமி தொற்றி வீங்கிச் சீழ் பிடிப்பதே அதிகமாகக் காணப்படும் பிரச்சனையாகும். மாறாக தோடு, மூக்குத்தி, காப்பு, மெட்டி, பொட்டு போன்றவற்றை அணியும் இடங்களில் சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டு எக்ஸிமா ஏற்படுவது அடுத்த முக்கிய சிக்கலாகும்.

இவற்றைத் தவிர, அவ்விடங்களில் தடித்த தழும்பு (மறு) (Keloid)   தோன்றுவது, கட்டிகள் வளர்வது (cyst formation) காது மடல் பிரிவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதையும் காண முடிகிறது. குருதிக் கண்டல் (hematoma) ஏற்படவும் வாய்ப்புண்டு.

புதை குழியில் சுரை

ஆனால் இந்தப் பெண்ணின் பிரச்சனை வேறாகும். குழந்தைப் பருவத்தில் குத்திய போதும் இதுவரை எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அவ்விடத்தில் அழற்சி ஏற்படவோ, கிருமி தொற்றவோ, சீழ்பிடிக்கவோ இல்லை. கடுமையான வேதனையும் இல்லை.

இருந்தபோதும் பாம்பு தேரையை விழுங்குவது போல காது மடலானது தோட்டுச் சுரையை முழுங்கிவிட்டது.

புதையுண்ட தோட்டுச் சுரை (Embedded Ear ring எனலாம்.


தோடு போடுவதால் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும்பாலானவை காது குத்தும் செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே ஏற்படுகின்றன. அதாவது தவறான முறைகளில் காது குத்துவதின் பின்விளைவுகளாகும். கிருமித் தொற்று, தழும்பு ஏற்படல், குருதிக் கண்டல், கட்டிகள் வளர்தல், காது மடல் பிரிதல் போன்றவை பற்றி ஏற்கனவே சொன்னோம்.

இவற்றைத் தவிர வைரஸ் கிருமித் தொற்றால் ஏற்படும் ஈரல் அழற்சி (Hepattitis), குருத்தெலும்பு அழற்சி (osteomyelitis)  போன்றவை சற்று பாரதூரமானவையாகும்.

காரணங்கள் எவை?

இவை வருவதற்கு இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்லலாம்.

  1. காது குத்தும் செயற்பாட்டில் உள்ள தவறுகளும் திறமையின்மைகளும்.  
  2. தவறான பொருத்தமற்ற காதணிகள்
காது குத்துவதற்கு மருத்துவர்தான் தேவை என்றில்லை. நகைக் கடைக்காரர் முதல், வீட்டிலுள்ள பாட்டி முதல் யாவரும் குத்துகிறார்கள்.  சுத்தம் செய்யாத காதுச் சோணையில் அழுக்குப் படிந்த கைகளாலும் குத்தப்படுவது உண்டு.
  • ஊசிகள், சட்டைப் பின், போன்ற கூரான எதையும் பயன்படுத்துவர். 
  • முனை கூராக்கிய தோட்டின் தண்டை கொண்டு நேரடியாகத் துளையிடுவதும் உண்டு. 
  • விசையூட்டிய சுருள் கம்பி கொண்டு (spring-loaded gunsவெளிநாடுகளில் குத்துவது உண்டு. 
  • நகைக் கடைக்காரர்கள் காது குத்துவதற்கென விசேடமான கூர்க்கம்பி வைத்திருப்பார்கள். 
கருவி எதுவானாலும் சுத்தமாக இருக்க வேண்டும். காது மடலையும் குத்துவதற்கு முன்னர் கிருமி நீக்குவதற்காக சுத்தப்படுத்த வேண்டும்.

சரியான முறையில் சுகாதாரம் பேணப்படாவிட்டால் குத்திய இடத்தில் அழற்சி ஏற்படும். அதைக் கவனிக்காது விட்டால் அழற்சி குணமாகும்;போது வளரும் புதிய சருமமானது தோலை மூடி வளர்ந்துவிடலாம். இதற்கு ஒரு சில நாட்கள் முதல் பல வாரங்கள் எடுக்கலாம்.

பொருத்தற்ற காரணிகளை அணிவதும் இப் பிரச்சனைக்கு மற்றொரு காரணமாகும்.

  • காதணியான தோட்டுச் சுரையின் பின் முனை மிகச் சிறியதாக இருந்தால் அது காதுச் சோணைக்குள் இலகுவாகப் புதைந்துவிடக் காரணமாகலாம். முன்னைய காலங்களில் சுரைகள் பெரிய வட்டமாக இருக்கும். இப்பொழுது அவை குண்டுமணி போலச் சுருங்கிவிட்டதை அறிவீர்கள். 
  • தோட்டின் தண்டானது குறுகியதாக இருந்தால் சுரையானது காதுச் சோணைiயை அழுத்திய படி இருக்கும். இதனாலும் அங்கு அழற்சி ஏற்பட்டு சுரையானது கருமத்தினுள் அமிழ்ந்து போய்விடலாம்.  
  • தங்கத்திலான தோடுகள் நல்லவை. மாறாக நிக்கல் போன்ற உலோகங்களால் ஆனவையும் கலப்படமான தோடுகளும் சிலருக்கு சருமத்தில் அழற்சியை ஏற்படுத்தி சுரை புதைந்து போவதற்கு காரணமாகலாம். 
  • சுரையானது தோட்டை விடப் பாரமானதாக இருப்பதால் காதுச் சோணையில் அழுத்தம் சமச் சீராக இருப்பதில்லை. முற்புறம் பாரம் அதிகமாக இருப்பதால் தோடு முன்புறம் சரிய முனைய சுரையானது சோணையுடன் அழுத்தப்படும். கால ஓட்டத்தில் சுரை புதைவதற்கான சாத்தியத்தை இது அதிகரிக்கும்.

ஆனால் இவளுக்கு அண்மையில் காது குத்தப்படவில்லை. சிறுவயதில்தான் குத்துப்பட்டது. அதில் கிருமித் தொற்று ஏற்படவில்லை. நல்ல தங்கத்தோடு. எனவே கலப்படத் தங்கத் தோடுகளால் அல்லது சாதாரண விலை குறைந்த தோடுகளால் ஏற்படுவது போல அழற்சி ஏற்பட்டிருக்கவில்லை.

எனவே இவளது தோடு சோணைக்குள் அமிழ்ந்து போதற்குக் காரணம் என்ன?

காதுச் சோணையை மரக்கச் செய்து அவ்விடத்தில் சத்திரசிகிச்சை கத்தியினால் வெட்டி தோட்டையும் சுரையையும் அகற்ற நேர்ந்தது. தோட்டுடன் சுரையும் சேர்ந்தே வந்தது.



சிறிய தண்டு, குறுகிய சுரை முனை ஆகியவற்றை அவதானிக்க முடிந்தது. எனவே சுரையானது சருமத்தில் அழுத்துப்பட்டு படிப்படியாக சோணைக்குள் மறைந்திருக்கலாம் என அனுமானித்தோம்.

படிப்படியாக மறைந்ததால் அது புதையுண்டு போவதை நோயாளியால் உணர முடியவில்லை. முற்றாக மறைந்து நீண்ட நாட்களின் பின்னரே அவதானித்;தாள்.

அவதானிக்க வேண்டியவை?

புதை குளியில் சுரை மாழ்வதைத் தடுப்பது எப்படி?

  • காது குத்துவதில் நல்ல அனுபவம் உள்ளவரைக் கொண்டு சுகாதார முறைப்படி குத்த வேண்டும். 
  • தோட்டின் தண்டு போதிய நீளமுள்ளதாகவும், சுரையின் முனை சற்று அகலமுள்ளதாகவும் இருந்தால் அது சருமத்தில் மறைவதற்கான சாத்தியம் குறைவு. 
  • காது குத்தியவுடன் தோடு அணிவதைத் தவிர்ப்பது நல்லது. குத்திய துவாரத்திற்குள் நைலோன் நூலைப் புகுத்தி முனைகளை வளையம் போலக் கட்டி காயம் ஆறும் வரை வைத்திருக்க வேண்டும். சில நாட்களின் பின்னர் தோட்டைப் போட்டால் தோட்டின் உலோகத்திற்கு எதிரான ஒவ்வாவை ஏற்படாது. அழற்சி தோன்றாது. தோடு புதைவதற்கான சாத்தியம் அருகிவிடும். 
  • காது குத்திய பின்னர் தோட்டை அக்கறையின்றி விட்டுவிடக் கூடாது. எமது முன்னோர்கள் காதில் இருக்கும் தோட்டை துவாரத்தில் சுழலுமாறு சுற்றி சுற்றிச் அசைத்துவிடுவார்கள். இதனால் துவாரம் சுருங்காமல் இருப்பதுடன் சுரை மறையாமல் காப்பாற்ற முடிந்தது. முக்கியமாக குழந்தைகளுக்கு காது குத்திய பின்னர் அவ்வாறு செய்யும் வழக்கம் இருந்தது. 
  • சுரையுள்ள தோடுகளுக்குப் பதிலாக வளையம் போன்ற தோடுகளை உபயோகித்தால் இப்பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. 
  • குளிக்கும்போது கழற்றி வைப்பது, இரவில் கழற்றி வைப்பது, இடையிடையே தோடுகளை மாற்றி அணிவது போன்ற செயல்கள் சுரை அமிழ்ந்து போவதற்கான சாத்தியத்தை குறைக்கும்.
தோடு மறைவது போலவே மூக்குத்தியின் சுரை சருமத்திற்குள் அமிழ்ந்து போவதையும் இடையிடையே காண்கிறோம். அவற்றிக்கான காரணங்களும், தடுப்பு முறைகளும் சிகிச்சைகளும் காதுத் தோட்டிற்கானதைப் போன்றதே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.00.0



Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>