Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

பழங்களும் நோய்களும்

$
0
0
"வாயைக் கட்டிக் கிடக்கிறாளே. ரம்புட்டான் ரம்புட்டானாகத் திண்டு தீத்தாள். இப்ப காய்ச்சல் எண்டு அனுங்கிக் கொண்டிருக்கிறாள்."திட்டித் தீர்த்தார் தந்தை. வேலைக் போகாமல் பிள்ளையை மருத்துவமனைக்குக் கூட்டித் திரிய வேண்டிக் கிடக்கிறதே என்ற சினமாக இருக்கலாம்.


இவர் மட்டுமல்ல, இன்னமும் பலர் தங்கள் பிள்ளைகள் ரம்புட்டான் பழம் சாப்பிட்டதால்தான் காய்ச்சல் வந்தது என அவர்களில் என்று குற்றம் கண்டார்கள்.

மே, ஜீன் ஜீலை மாதங்கள் பொதுவாக ரம்புட்டான சீசனாக இருக்கும். மல்வான ரம்புட்டான் மிகவும் பிரசித்தமானது. களனிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்திலிலேயே பெருமளவு ரம்புட்டான் உற்பத்தியாகின்றது.

இருந்தாலும் பிபில, மொனராஹல பகுதியிலிருந்து தை மாசி மாசங்களில் குறைந்தளவு ரம்புட்டான் பழங்கள் வருவதுண்டு.
ரம்புட்டானுக்கு காய்ச்சலா?

சீசன் காலத்தில் ரோட் ஓரமெல்லாம் தற்காலிக கடைகள், லொறிகள். இவற்றில் எல்லாம் மதாளித்த சிவத்த கம்பளிப் பூச்சிகள் போலப் பழங்கள் குவிந்து கிடக்கும். வழமையான பழக்கடைகளிலும் கூடை நிறைய வைத்திருப்பார்கள். பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரம்புட்டான் அமுக்குவதில் பின்நிற்பதில்லை. இவ்வாறு ரம்புட்டான் சாப்பிட்டவர்களில் சிலர் காய்ச்சலுடன் வருகிறார்கள். 'ரம்புட்டான் காய்ச்சல்'என்று தாங்களாகவே நாமம் சூட்டிவிடுகிறார்கள்.

அதே வேளை ரம்புட்டான் சாப்பிடாத பலரும் இப் பருவ காலத்தில் காய்ச்சலுடன் வருகிறார்கள்.

காய்ச்சல் என்பது தனி ஒரு நோயல்ல என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். தடிமன் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், மலேரியாக் காய்ச்சல், டைபொயிட் காய்ச்சல் எனப் பலவகை இருக்கின்றன. இவை யாவம் கிருமிகள் தொற்றுவதாலேயே வருகிறது.

ரம்புட்டான் சாப்பிடுவதால் எவ்வித காய்ச்சலும் வருவதில்லை. ஆனால் இது பரவலாகக் கிடைக்கும் காலங்களான ஜீன் ஜீலை மாதங்களில் பெரும்பாலும் தென்னிலங்கையில் மழை பெய்வதுண்டு. வெயிலுடன் மழையும் மாறி மாறி வரும் இம் மாதங்களில் டெங்கு முதல் சாதாரண காய்ச்சல்கள் எனப் பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன

நுளம்பு கடிப்பதால் டெங்குக் காய்ச்சல், மலேரியா போன்றவை வருகிறன. எலிகளின் எச்சங்களால் எலிக்காய்ச்சல் பரவுகிறது. நோயுள்ளவர் தும்முவதாலும் இருமுவதாலும் தொற்றுகிறது பன்றிக் காய்ச்சல். ரம்புட்டான் பழம் சாப்பிடுவதால் எந்தக் காய்ச்சலும் பரவுவதில்லை

எப்படி உண்பது

நெல்லிக்காய், மங்குஸ்தான், மாம்பழம், கொய்யாப்பழம் போன்ற எந்தப் பழத்தை வாங்கினாலும் அவற்றை உண்ண முன்னர் நன்கு கழுவிய பின்னரே உண்ண வேண்டும் என்பது தெரிந்ததே. பழத்தின் உட்புறம் கிருமிகள் தீண்டாது சுத்தமாக இருக்கும் என்ற போதிலும் அவற்றின் தோலானது பலவித அழுக்குகளாலும் கிருமிகளாலும் மாசடைந்திருக்கக் கூடும்.

ஏனெனில் பழங்களை பிடுங்கி நிலத்தில் போட்டிருப்பார்கள். நிலத்தில் நாய் பூனை போன்ற பிராணிகளின் மலம், குருவிகளின் எச்சம், மனிதர்களின் கழிவுகள் போன்ற பலவற்றிலிருந்த கிருமிகள் பழத்தின் தோலை மாசுபடுத்தியிருக்கும். பழங்களை பறித்த இடங்களிலிருந்து விற்பனை செய்யும் இடத்திற்கு கொண்டுவரம் பயன்படுத்தும் பைகள் சாக்கு போன்றவற்றில் இருந்தும் கிருமிகள் பரவியிருக்கும்.

அதேபோல தெருவோரம் வைத்து விற்கும்போதும் காற்றிலிருந்தும் பழங்களைக் கையாளும் மனிதர்களின் கரங்களிலிருந்தும் பலவிதமான கிருமிகள் அவற்றின் தோலில் படிந்திருக்க வாய்ப்புண்டு.

எனவேதான் ரம்புட்டான் முதல் வேறு எந்தப் பழத்தை வாங்கினாலும் சாப்பிட முன்னர் நன்கு கழுவவேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும். அல்லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

கழுவிய பின்னரும் கூட ரப்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.
கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே பழத்தை எடுத்து உண்ணுங்கள். சுத்தப்படுத்திய பழங்களைச் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் தொற்றாது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.

மாறாக சுத்தப்படுத்தாமல் உண்டால் வயிற்றோட்டம், வாந்தி, டைபொயிட், செங்கண்மாரி, குடற் பூச்சிகள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் ஆளாகக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை

ரம்புட்டான் பழம் பற்றி

ரம்புட்டான் இலங்கையில் பிரபல்யமாக இருந்தாலும் இதன் பூர்வீகம் இந்தோனிசியா என அறியப்படுகிறது.

இது அதிக நீர்ச் சத்துக் அதிகம் கொண்ட பழமாகும். ஆயினும் பழத்தின் சாப்பிடக் கூடிய பகுதியின் 100 கிராமிலிருந்து 64 கிலோ கலோரியளவு சக்தி கிடைக்கும். அதேவேளை புரதம் 1 கிராம் உள்ளது. கொழுப்பு மிகக் குறைவாக 0.1 கிராம் மட்டுமே உள்ளது. கல்சியம், பொஸ்பரஸ் போன்ற கனிமங்களும், ரைபோபிளேவின், தயமின், விற்றமின் சீ போன்றவையும் நிறையக் கிடைக்கின்றன.

இதன் காரணமாக இந்தோனிசியா. மலேயா போன்ற நாடுகளில் நீரிழிவு, பிரஸர் போன்ற நோய்களுக்கான வீட்டு மருத்துவமாக உபயோகிக்கப்படுகிறது. காய்ச்சலுக்கு மருந்தாக இதன் பட்டைகளை உபயோகிப்பதாகவும் தெரிகிறது.

ரம்புட்டானால் காய்ச்சல் வருகிறது என நம்மவர்கள் சொல்ல காய்ச்சலுக்கு மருந்தாக அதே ரம்புட்டானை வேறு நாடுகளில் பயன்படுத்துவது சுவார்ஸமான தகவலாகப்படுகிறது. இருந்தபோதும் இதனால் காய்ச்சல் வருகிறது என்பது தவறான கருத்து என்றே சொல்ல வேண்டும்.

வேறு பழங்கள் பற்றிய தவறான எண்ணங்கள்

ரம்புட்டான் பற்றி மட்டுமல்ல வேறு பழங்கள் பற்றியும் எமது சமூகத்தினரிடையே பல தவறான எண்ணங்கள் இருக்கவே செய்கின்றன. அவை பற்றிய விழிப்புணர்வு தேவை.

"முழுகிப் போட்டு மாம்பழம் சாப்பிட்டன். தொண்டை கட்டி சளியோடை காய்ச்சல் வந்துவிட்டது"எனத் தன்னைத்தானே நொந்து கொண்டாள் அரச நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி.


"நானும்தான் முழு மாம்பழம் சாப்பிட்டனான். எனக்கு ஒண்டும் இல்லைதானே"என்றார்; கணவன். மற்றவர் முன்னாலாவது தனது வீரத்தைக் காட்டிய பெருமை முகத்தில் படர்ந்தது.

"இந்தச் சளித் தொல்லையோடை  நாளாந்தம் அல்லாடுறன். வாழைப்பழத்தை தொடுறதே இல்லை"என்றார் இன்னொரு பெரியவர்.

"தயங்காமல் வாழைப்பழம் தினமும் சாப்பீடுங்கோ. இவ்வளவு நாளும் வாழைப்பழத்தை கைவிட்டும் சளித்தொல்லை தீரவில்லை என்றால், உங்கடை சளிக்கு வாழைப்பழம் காரணம் இல்லை என்றுதானே அர்த்தம்"என்றேன் நான்.

சிறிது காலத்திற்கு முன்னர் Imperial College of London ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா நோய் வருவதற்கான சாத்தியம் சாப்பிடாதவர்களை விட 34% குறைவு என்கிறது. எனவே சளித்தொல்லைக்குக் காரணம் வாழைப்பழம் அல்ல என்பது தெளிவாகிறது.

அதேபோல பிரஷர் வராமல் தடுப்பதற்கும் அதைக் கட்டுப்படுத்துவதற்கும் வாழைப்பழத்தில் உள்ள கனிமமான பொட்டாசியம் உதவும். இதற்கு எதிர்மாறாக கறி உப்பில் உள்ள சோடியம் சத்து பிரஷரை உயர்த்தும் என்பது பரவலாகத் தெரிந்த விடயமே. அத்துடன் குருதியில் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதானது பல்வேறு நோய்களால் ஒருவர் மரணிக்கக் கூடிய சாத்தியத்தை 20% ஆல் குறைக்கிறது என்கிறது மற்றொரு ஆய்வு.

வாழைப்பழம் பற்றிய தவறான கருத்துகளை உதறி ஒதுக்க வேண்டும். அது மிகச் சிறந்த பழங்களில் ஒன்று என்பதால்தான் உலகில் ஆகக் குறைந்தது 107 நாடுகளில் பயிரடப்படுகிறது. பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.


மாம்பழத்தில் 20ற்கு மேற்பட்ட விட்டமின்களும் தாதுப் பொருட்களும் உண்டு. அதிலுள்ள zeaxanthin என்ற ஒட்சிசனெதிரி ஆனது கண்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய நீல ஒளிக் கதிர்களை வடித்தெடுப்பதன் மூலம் மக்கியுலர் டிஜெனரேசன் (Macular degeneration) என்ற கண்பார்வை இழப்பு நோயைத் தடுக்கும் எனக் கூறுகிறார்கள்.

அத்துடன் மாம்பழத்தில் உள்ள பீற்றா கரோடின் என்ற பொருளாளது சளி ஆஸ்த்தா போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பப்பாளி, பூசணி, புரொகோலி, கரட் போன்றவற்றிலும் இது நிறைய உண்டு. அத்துடன் புரஸ்ரேட் புற்று நோய், பெருங் குடல் புற்று நோய் போன்றவற்றையும் தடுக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு வகைப் பழங்களிலும் பல போஷணைப் பொருட்கள் உண்டு. அவை பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கள் கொண்டவை. ஆயினும் அவற்றை விபரிக்க கட்டுரையின் நீளம் இடம் தராது.

ஓவ்வொரு வேளை உணவுடனும் ஏதாவது ஒரு பழத்தையாவது உண்ணுங்கள். நோயற்ற வாழ்வு வாழ அது கை கொடுக்கும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>