Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

வால் எலும்பு வலி

$
0
0
உள்ளே நுழைந்த அந்த இளம் மாணவியின் முகத்தில் இனம் புரியாத தயக்கம். 'இருங்கோவன்'கதிரையை அவளை நோக்கி நகர்த்தினேன்.

உட்காரவில்லை.

'இருக்கிறாள் இல்லை வலிக்குதாம்'என இடைமறித்தாள் அம்மா.

'எங்கை வலி'என்று கேட்டதும் அந்தச் சின்னத் தேவதை வெட்கப்பட்டாள்.

மேலும் பல கேள்விகள் கேட்டதும் அது வால் எலும்பு வலி என்பது எனக்குப் புரிந்தது. அவள் வெட்கப்படுவதில் நியாயம் இருக்கிறதுதான்.

தேவதைக்கு வாலா என அதிசயிக்காதீர்கள். உங்களுக்கும் எனக்கும் உள்ளது அவளுக்கு மட்டும் இல்லாது போகுமா?

மனிதன் உட்பட முள்ளந்தண்டு மிருகங்களுக்கு (Vertebrates) முள்ளந்தண்டு (முதுகெலும்பு) இருக்கிறது. இது ஒரு எலும்பு அல்ல. பல தனித்தனி எலும்புகளின் சேர்க்கைகளால் ஆனது என்பது உங்களுக்குத் தெரியும்.

கழுத்தில் ஆரம்பித்து முதுகு வழி தொடர்ந்து இடுப்புப் பகுதியையும் கடந்து இறுதியில் முடிவது இந்த வால் எலும்புகளில்தான். இவ் எலும்பை ஆங்கிலத்தில் coccyx என்பார்கள். தமிழில் குத எலும்பு, வால் எலும்பு, உள்வால் எலும்பு என்று எப்படி வேண்டுமானலும் சொல்லலாம்.


இவை பொதுவாக எந்த ஈடாட்டமும் இன்றி செயலற்று வாழாதிருப்பவை. எனவே இவற்றில் நோய் ஏற்படுவது குறைவு. ஆயினும் சில தருணங்களில் நோய் ஏற்படவே செய்யும்.

அந்தக் குத எலும்பில்தான் இவளுக்கு வலி. படுக்கையில் கிடத்தி, பிட்டப் (குண்டி) பகுதி தசை மடிப்புகளை விரித்து, மலுவாயிலுக்கு சற்று மேலே உள்ள குத எலும்பின் நுனிப் பகுதியைத் தொட்டபோது கடும் வலி இருப்பது புரிந்தது.

அக்கம் பக்கம் உள்ள சருமத்திலோ சதைப் பகுதிகளிவோ வீக்கம் வலி வெப்பம் எதுவுமே இல்லை என்பதை நிச்சயப்படுத்தி வேறு நோய் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

குத எலும்பு அழற்சி

இவ்வாறு குத எலும்பில் வலி ஏற்படுவதை குத எலும்பு அழற்சி (Coccydynia)  எனலாம். ஆயினும் அதன் அருகில் உள்ள ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற வேறு வலிகள் ஏற்படலாம் என்பதால் கவனம் எடுக்க வேண்டும்.

உதாரணமாக மலவாயில் கட்டிகள், மூலக் கட்டிகள், இடுப்பு எலும்பு வலிகள், தசைப் பிடிப்புகள் போன்றவையும் அவ்விடத்தில் வலியைத் தோற்றுவிப்பதுண்டு.

இந்த வலியானது கடுமையானது அல்ல என்றபோதும் 'அம்மல்'வலியாகத் தொடரும். அவ்விடத்தை அழுத்தும் போது மிகக் கடுமையாக இருக்கும்.

  • திடீரெனக் குண்டி அடிபட உட்கார்ந்தாலோ, 
  • துவிச்சக்கர போன்ற அழுத்தும் இருக்கைகளிலும், 
  • முச்சக்கர வண்டி போன்ற குலுக்கும் வாகனங்களிலும் பயணம் செய்தாலோ மோசமாகும்.


இந் நோய் ஏன் ஏற்படுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்வது சிரமம். பொதுவாக அடிபட உட்காரல், விழுதல். பின்புறமாக சுவரோடு மோதுதல் போன்றவை காரணமாக இருக்கலாம்.

இதைக் கண்டறியவோ நோயை உறுதிப்படுத்தவோ பரிசோதனைகள் எதுவும் அவசியமில்லை. நோயாளி சொல்வதைக் கேட்டு மருத்துவர் பரிசோதித்துப் பார்ப்பதன் மூலம் நோய் நிர்ணயம் செய்ய முடியும். அருகில் உள்ள தசைப் பகுதிகளிலோ எலும்புகளிலோ பிரச்சனை இருக்கலாம் எனச் சந்தேகித்தால் மட்டும் CAT Scan, MRI Scan  போன்ற பரிசோதனைகள் அவசியமாகும்.

இந்த வலி வந்தவுடன் மருத்துவரை நாடி ஓட வேண்டிய அவசியமில்லை. அடிப்பகுதி அண்டாதவாறு குஷன் அல்லது துணிகள் வைத்து மென்மையாக்கப்பட்ட இருக்கைகளிலேயே உட்கார வேண்டும்.
நீண்டநேரம் தொடர்ந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும்.

மருத்துவம்

பரசிட்டமோல் அல்லது வீரியம் கூடிய வலி நிவாரணிகள் வலியைத் தணிக்க
உதவும்.

ஆயினும் நரம்புகளை அமைதிப்படுத்தும் மருந்துகள் கூடுதலாகப் பலன் தரலாம்.

ஸ்டீரொயிட் ஊசி மருந்தை அவ்விடத்தில் ஏற்றுவது ஆச்சரியகராமான முறையில் வலியைத் தணிக்கும். வலியைத் தணிப்பது மட்டுமின்றி நோயிலிருந்து பூரண விடுதலையை பெரும்பாலும் கொடுக்கும். அனுபவமுள்ள மருத்துவர்கள் இதைத் தங்கள் மருத்துவ ஆலோசனை அறையில் வைத்தே போடக் கூடியதாக இருக்கும்.

சில வகை மசாஸ் முறைகளும் பயிற்சிகளும் உதவலாம்.

வலி கடுமையாகவும் தொடர்ந்து தொல்லை கொடுப்பதகவும், ஏனைய சிகிச்சைகளுக்கு தணிவதாக இல்லை எனில் சத்திரசிகிச்சை செய்யப்படலாம். Coccygectomy எனப்படும் இந்தச் சிகிச்சையில் அந்த குத எலும்பை அகற்றுவார்கள். ஆயினும் அதற்கான தேவை பெரும்பாலும் ஏற்படுவதில்லை.

நீங்கள் செய்யக் கூடியவை

சுடு ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைப்பது போன்றவை உதவக் கூடும். ஆயினும் அந்த இடத்தில் இவற்றைச் செய்வது மிகுந்த இடைஞ்சலானது என்பதை மறுப்பதற்கில்லை.

வலி உள்ள இடம் மீண்டும் தாக்குப்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். அதேபோல அவ்விடத்திற்கு ஆறுதல் கொடுப்பது அவசியம்.

ஏற்கனவே குறிப்பட்டதுபோல மெதுமையான இருக்கைகளில் உட்கார வேண்டும். மெத்தை, தலையணை, குஷன் போன்றவற்றை இருக்கையில் வைத்து அதன் மேல் உட்கார வேண்டும். உட்காரும்போதும் திடீரென அடிபட உட்காராது, மெதுவாக கைபிடிகளைப் பிடித்து பாரம் அடியில் தாக்காதவாறு மென்மையாக உட்கார வேண்டும்.


நடுப்பகுதியில் குழி வைத்து அப்பகுதி அண்டாதவாறு உட்காரக் கூடிய கார் டியூப் போன்ற இருக்கைகள் கிடைக்கின்றன. முதலில் கூறிய அந்தக் குட்டித் தேவதை அத்தகைய ஒரு இருக்கையைப் பயன்படுத்தி கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை நலமே சுற்றுப் பிரயாணம் செய்ய முடிந்திருந்தது.

எலும்பு உள்ள இடத்தில் அண்டாதவாறு பள்ளம் விடப்பட்ட குஷன்கள் (Coccyx (tailbone) cushions)  விற்பனைக்கு கிடைக்கிறதாக அறிகிறேன். இலங்கையில் இருப்பதை நான் அறியவில்லை.


இடுப்பு எலும்புப் பகுதியில் உள்ள தசைககளைத் தளரச் செய்யும் பயிற்சிகள் (pelvic floorrelaxation) கொடுப்பது உதவும். ஆழமாக மூச்சு எடுத்து மலவாயில் சலவாயில் ஆகியவற்றை அண்டியுள்ள தசைகளை தளரச் செய்வது இதுவாகும். பொதுவாக சிறுநீர் கழியும் போது இவ்வாறு தசைகள் தளர்வதுண்டு.

பொதுவாக மனதை அலட்டிக் கொள்ளாது மேற் கூறிய வாழ்க்கை முறைகளையும் பயிற்சிகளையும் செய்ய நோய் குணமாகும். இப் பெண்ணிற்கு அவற்றால் வலி தணியாததால் ஊசி ஏற்றிக் குணமாக்க வேண்டியதாயிற்று.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0




Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>