உங்கள் டொக்டருடனான உறவு திருப்தி தருகிறதா?
உங்கள் டொக்டர் யார்?
அவர் தனியார் துறை சார்ந்த குடும்ப வைத்தியரா? அரசாங்க வைத்தியரா? அல்லது சத்திர சிகிச்சை, மகப்பேறு, பொது வைத்தியம் போன்ற ஏதாவது ஒரு துறை சார்ந்த வைத்திய நிபுணரா?
எதுவாக இருந்தபோதும் அவருடனான தொழில் ரீதியான தொடர்பு உங்களுக்கு திருப்தி தருகிறதா?
உங்களது நோயை அவர் குணமாக்கக் கூடும். மாறாக சில நோய்கள் உடனடியாகக் குணமாக மாட்டா. எனவே மீண்டும் மீண்டும் அவரிடம் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். இருதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற சில நோய்களுக்கு வாழ் முழுவதும் வைத்தியரை ஒழுங்கான கால இடைவெளியில் சந்திக்க வேண்டி நேரலாம்.
*நோயை ஓரளவு குணமாக்குவதற்கு அப்பால் அவரது சேவை உங்களுக்குத் திருப்தி தருகிறதா?
*அவர் உங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்கிச் சிகிச்சை அளிக்கிறாரா? *உங்களை முகமலர்ச்சியோடு வரவேற்கிறாரா? அனுதாபம் காட்டுகிறாரா? *உங்கள் குறைகளை காது கொடுத்துக் கேட்கிறாரா?
*உங்கள் நோய் என்ன என்பது பற்றி தெளிவாக விளக்குகிறாரா? *உங்களுக்கான சிகிச்சை முறைகள் எவை எனத் தெளிவாக எடுத்துக் கூறுகிறாரா?
*சிகிச்சை நடவடிக்கையில் உங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள், பத்தியங்கள் போன்றவற்றை சொல்லித் தருகிறாரா?
பெரும்பாலும் இல்லை என்பதுதான் உங்கள் விடையாக இருக்கக் கூடும்.
இதற்குக் காரணம் என்ன? வைத்தியர்களின் பார்வைக்கும் நோயாளிகளின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே பாரிய இடைவெளி ஏன் இருக்கிறது?
இடைவெளிக்கு முக்கிய காரணம் வைத்தியர்கள் மிகக் குறைந்த அளவு நேரத்தையே நோயாளியுடன் இப்பொழுது செலவழிக்கிறார்கள். நீங்கள் வைத்தியருக்கு அருகில் சென்று உட்கார்ந்து உங்கள் பிரச்சனைகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல முன்னரே மருத்துவர் மருந்தை எழுதிவிடுகிறார்.
கேள்வி கேட்க முற்பட்டால் முகத்தில் அடித்தாற்போல ஓரிரு வார்த்தை சொல்லிவிட்டு அடுத்த நோயாளியைக் கூப்பிடுகிறார். மருந்துச்சிட்டை உங்கள் கையில் திணிக்கப்பட, மறுபேச்சின்றி வெளியேற நேர்கிறது.
இதனால் நோயாளிகளின் நோய் சரியாக நிர்ணயிக்கப்படுவது கேள்விக்குறியாகிறது. குறுகிய நேரமானது நோயாளிகளின் குறைகளை திருப்தியாகக் கேட்டறிந்து, அவர்களைப் பரிசோதித்து நோயைக் கண்டறியவோ, நோய் பற்றிய விளக்கங்களை நோயாளிக்குத் தெளிவுபடுத்தவோ போதுமானதல்ல.
எல்லாவற்றிக்கும் மேலாக நோயாளி மனம் திருப்திப்படவும் முடிவதில்லை. இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் ஒவ்வொரு வெளிநோயாளருடனும் குறைந்தது பத்து நிமிடங்களைச் செலவு செய்கிறார்கள். இங்கு பெரும்பாலும் ஐந்து நிமிடமளவில்தான் ஒதுக்கப்படுகிறது. சில வைத்தியர்கள் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் ஒதுக்குவதில்லை.
இதற்குக் காரணம் என்ன?
காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் சமச்சீரற்ற மருத்துவ சேவைவைதான் முக்கிய காரணமாகும். சில வைத்தியர்கள் ஒரு நாளுக்கு 10-15 நோயாளிகளைக் கூடப் பார்க்க முடியாது ஈ ஓட்டிக் கொண்டிருக்கும்போது வேறுசில வைத்தியர்கள் ஒரு நாளுக்கு 100 – 150 நோயாளர்களைப் பார்க்க வேண்டிய நிலையில் தன்னிடம் வரும் நோயாளிகளைத் திருப்தி செய்ய முடியாது திணறுகிறார்கள்.
இதை நிவர்த்தி முடியுமா? மேலை நாடுகளில் செய்கிறார்கள். எந்த நோயானாலும் முதலில் தமது குடும்ப வைத்தியரிடமே (Family Physician ) செல்ல வேண்டும். அவர் தானே சிகிச்சை அளிப்பார். அல்லது தேவை ஏற்படின் அந்நோய்க்கு ஏற்ற வைத்திய நிபுணரிடம் அனுப்பி வைப்பார். அவசியம் ஏற்படின் வைத்தியசாலையில் அனுமதிக்கவும் சிபாhர்சு செய்வார்.
நோயாளிகள் தாமாவே நேரடியாக வைத்திய நிபுணரைச் (Specialist- ) சந்திக்கவோ, வைத்தியசாலையில் அனுமதி பெறவோ முடியாது.
இதன் மூலம் வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்படாது தடுக்க முடிகிறது.
வைத்திய நிபுணர்களும் அவசியமற்ற நோயாளிகளுடன் நேரத்தை வீணே செலவழிக்காது தமது நிபுணத்தும் அவசியம் தேவைப்படும் நோயாளிகளுடன் மாத்திரம் தனது பொன்னான நேரத்தைச் செலவழித்து தனது மேலான மருத்துவ அறிவை அர்த்தமுள்ள முறையில் சமூகத்திற்கு வழங்க முடிகிறது.
இம் முறையை எமது நாட்டிற்கு ஏற்ற மாற்றங்களுடன் செயற்படுத்தலாம். அடுத்த பொதுத் தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு செயற்படும் தூரநோக்கற்ற அரசியற் கட்சிகளும் அரசாங்கங்களும் இத்தகைய மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்குமா?
ஸ்பெசலிஸ்டைக் காண்பதற்கும், வைத்தியசாலையில் அனுமதி பெறவும் முறையன சிபார்சுக் கடிதம் (Referral Letter ) கொண்டு செல்லும் முறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே பொருளாதார மற்றும் நிபுணத்துவ வீண்விரயங்கள் தவிர்க்கப்பட்டு தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை கிட்டுவதை உறுதி செய்யலாம்.
பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என நோயாளர்கள் நினைப்பதையும், பணம் கிடைக்குமென்றால் தனது துறைக்குத் தொடர்பற்ற நோயாளிக்கும் சிகிச்சை செய்யலாம் என்ற வைத்தியர்களின் மனநிலையும் மாறாவிட்டால் எந்தச் சட்டமும் நடைமுறையும் பயன்படாது என்பதும் உண்மையே.
மருந்துகள் மட்டும் நோயைக் குணப்படுத்துவதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. நம்பிக்கையும் மனத்திருப்தியும் தேவை என்றிருக்கும்போது எமது நோயாளிகளுக்கு அவை எட்டாக் கனியாகி விடுகிறது.
ஆரம்ப காலத்தில் மருத்துவனுக்கும் சமூகத்திற்கும் இடையே நெருங்கிய உறவு இருந்து வந்திருக்கிறது. காரணம் மருத்துவன் தான் பணியாற்றும் சமூகத்திலிருந்து பிறந்தவன். அதனால் அவனுக்கு அவன் பணியாற்றும் சமூகத்தின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றிய உள்ளார்ந்த அறிவும், தெளிவான சிந்தனையும் இருந்தது.
ஒவ்வொரு நோயாளியினதும் சமூக, குடும்பப் பின்னணி அவனுக்கு அத்துபடியாகத் தெரிந்திருந்தது. இதனால் அவன் செய்யும் வைத்தியம் நோயாளிக்கு இசைவானதாக அவனது நம்பிக்கைக்கு உரியதாக விளங்கியது.
வைத்தியத்தை வெறும் தொழிலாகக் கருதாமல் சேவை மனப்பான்மையுடன் நோயாளர்களின் மனதறிந்து வைத்தியம் செய்யப்பட்டது. அத்தகைய வைத்தியர்கள் மக்களது அபிமானத்தைப் பெற்றது மட்டுமின்றி அவர்களது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களானார்கள். தாம் வணங்கும் கடவுளுக்கு அடுத்தபடியாக துதிக்கப்பட்டனர்.
ஆனால் இன்று நிலமை மாறிவிட்டது. மருத்துவத்திற்கும் சமூகத்திற்குமான உறவில் கீறல்கள் பெருகிவிட்டன. இதற்குக் காரணங்கள் பல. இன்று மருத்துவம் சிறுசிறு துறைகளாக குறுகிவிட்டது.
இதனால் ஒரு நோய்க்கே ஒரே நோயாளி பல வைத்தியர்களைப் பார்க்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
உதாரணமாக நீரிழிவு நோயாளியை எடுத்துக் கொண்டால் அவன் தனது நீரிழிவைக் கட்டுப்படுத்த ஒரு வைத்தியரிடம் செல்ல வேண்டும். நீரிழிவால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டிற்கு கண் வைத்தியரிடம் செல்;லவேண்டும். கால் விறைப்பிற்கு நரம்புப் பகுதி வைத்தியரைக் காண வேண்டும். மற்றும் இருதயநோய் நிபுணர், சத்திர சிகிச்சை நிபுணர், உணவுத் தொகுதி நிபுணர் எனப் பலரைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அந்த நிபுணர்களும் அந்த நோயாளியின் தமது துறைசார்ந்த பிரச்சனைகளை முதன்மைப் படுத்துகிறார்களேயன்றி நோயாளியை முழுமையாகப் பார்ப்பதில்லை. இதனால் நோயாளிக்கும் வைத்தியனுக்கும் இடையே எந்த நெருக்கமான உறவும் அற்றுப் போய்விட்டது.
இதன் அடுத்த எல்லை இணையத்தின் வளர்ச்சி. இதன் காரணமாக நீங்கள் இன்று வீட்டில் இருந்தபடியே உங்களுக்குத் தேவையான வைத்திய நிபுணரை இணையத்தின் ஊடாக Book பண்ணக் கூடிய வசதி கிடைக்கிறது. இது இலங்கையிலும் கிடைக்கிறது.
ஆனால் அதேநேரம் தேவையற்ற சிறுகாரணங்களுக்காக் கூட வைத்திய நிபுணரை காண முடிகிறது. அத்தோடு தனது நோயோடு சற்றும் தொடர்பற்ற வைத்திய நிபுணரிடம் தவறாகச் செல்லவும் நேர்கிறது. இதனால் வைத்தியச் செலவு அதிகரிப்பது மாத்திரமின்றி அவரது நேரமும் விரயமாக்கப்படுகிறது.
இவற்றை விட நோயானியைப் பார்க்காமல் அவரைத் தொடாமல் இணையத்தின் ஊடாகத் தகவலைப் பெற்று சிகிச்சையளிக்கும் தொலை வைத்தியமும் (வுநடநஅநனiஉiநெ) அறிமுகமாகி விட்டது. ஆயினும் இத்தகைய மருத்துவம் நோயாளியின் உள்ளுணர்வைப் புரிந்து வைத்தியம் செய்கிறதா?
வைத்தியம் என்பது வெறுமனே விஞ்ஞான உண்மைகளை கொண்டு செய்யப்படுவதில்லை. விஞ்ஞானம் அடித்தளமாக உள்ள போதும் மருத்துவம் ஒரு கலையேயாகும்.
அதை ஒரு கலையாகவே ஆற்றுகைப்படுத்தும் சில வைத்தியர்கள் இன்றும்; இருக்கிறார்கள்.
நோயாளிகளை இன்முகம் காட்டி வரவேற்பதும்,
பெயர் சொல்லி அழைத்து நெருக்கமான உறவை வளர்ப்பதும், அவர்கள் சொல்வதை பொறுமையோடு காது கொடுத்துக் கேட்பதும்,
நோயாளி சொல்லத் தயங்கியவற்றை மறைமுகக் கேள்விகள் மூலமும், முகபாவங்களிலிருந்து புரிந்து கொள்வதும் கலையுணர்வோடு செய்யப்பட்டன.
கலையும் மருத்துவமும் இணைந்த உயர் தொழிலாக செய்யப்பட்ட மருத்துவம் இன்று விஞ்ஞான, இணைய வளர்ச்சிகளால் நோயாளிகளுடனான உறவு அறுபட்டு அர்த்தம் அற்றுப் போவதாக உணரப்படுகிறது.
திருப்தியற்ற மருத்துவ சேவைக்கு இன்னுமொரு முக்கிய காரணம் வைத்தியர்கள் ஒழுங்கான நோயாளர் விபரணக் கோவையை பேணாமையோயகும். அரச வைத்தியசாலைகளில் பேணப்படுவது உண்மையே. அங்கும் அவசரத்திற்கு ஒரு கோவையைத் தேடிக் கண்டு பிடிப்பது என்பது இலேசில் முடியாததாகும்.
சில குடும்ப வைத்தியர்களும் பேணுவதுண்டு.
ஆனால் வைத்திய நிபுணர்கள் பேணுவது என்பது குதிரைக் கொம்பு கிடைப்பதுபோல்தான். நோயாளர் விபரணக் கோவை என்பது நோயாளிகளின் பெயர், வயது, குடும்ப சமூகப் பின்னணி, முன்னிருந்த நோய்கள், பரம்பரையில் நோய் விபரம், செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள்,
செய்யப்பட்ட சிகிச்சைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் யாவும் அடங்கிய குறிப்பாகும்.
இன்று பெரும்பாலான வைத்தியர்களும் பல தனியார் வைத்தியர்களும் நோயாளிக்கு கொடுக்கும் மருந்துச் சிட்டையுடன் தமது கடமை முடிந்துவிட்டது எனக் கருதுகிறார்கள். இச் சிட்டையில் வாங்க வேண்டிய மருந்துகள் பற்றிய குறிப்புகள் மட்டுமே இருக்கும். அதிகமாகப் போனால் நோய் பற்றிய ஓரிரு வார்த்தைகளும் இருக்கும்.
அடுத்த முறை அதே வைத்தியரிடம் செல்லும்போது அச்சிட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். சிறுதுண்டுப் பேப்பர் தானே எனத் துலைத்துவிட்டால் அதோ கதிதான். சிட்டையைக் கொடுத்து விட்டு, இவர் எனது வழமையான வைத்தியர்தானே என்னைப் பற்றிய விபரங்கள் அவருக்குத் தெரியும்தானே என நினைத்தால் உங்களைப் போன்ற அப்பாவி யாருமே இருக்க முடியாது. ஆயிரக் கணக்கான நோயாளிகளை மாதாமாதம் பார்;க்கும் அவருக்கு உங்கள் முகம் ஞாபகத்தில் இருப்பதே பெரும் காரியம். நீங்கள் சொல்லும் ஓரிரு வார்த்தைகளையும் பழைய மருந்துச் சிட்டையையும் உதவியாகக் கொண்டு அடுத்த சிட்டையை நிரப்பி உங்கள் கையில் திணிப்பார்.
குணமானால் உங்கள் அதிஸ்டம்தான். குணாமாகவிட்டால் நீங்கள் மீண்டும் அவரிடம் செல்ல நேரிடும். உங்களுக்கோ நோய் குணமாகாத வேதனையும் வீண் பணச் செலவுமாகும். அவருக்கோ இன்னுமொரு கொன்ஸல்டேசனுக்கான பணம் கிடைத்த சந்தோசமுமாகும்.
கொம்பியூட்டர் வசதி பரவலாகக் கிட்டிவிட்ட இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் நோயாளர்களின் விபரணக் கோவையைப் பேணும் வித்தையை அறியாத வைத்தியர்கள் கற்கால அறிவுடன் திரிகிறார்களா? அல்லது அறிவிருந்தும் அதனைப் பயன்படுத்தி நோயாளர் நலனை மேம்படுத்தாது தமது வங்கிக் கணக்கை உயர்த்துவதில் மட்டும் குறியாக இருக்கிறார்களா?
வைத்தியர்களின் கொன்ஸல்ரேசன் பீஸ் அதிகரிப்பும், மருத்துவ ஆய்வு கூடப் பரிசோதனைகளுக்கான செலவுகளும், அவர் எழுதித் தருகின்ற மருந்துகளை வாங்குதற்கான செலவுகளும் உங்களைத் திணறடித்துக் கொண்டு இருக்குமே. இவற்றைப் பற்றியும் நிறைய எழுதலாம்தான். ஆனால் நான் எழுதுவதை விட நீங்களே எழுதுங்களேன்.
டொக்டர் அழகு சந்தோஷ்
0.00.0