Quantcast
Channel: ஹாய் நலமா?
Viewing all articles
Browse latest Browse all 292

குழந்தையின் வளர்ச்சிப் படிகள்; 2ம் வருடம்

$
0
0
குழந்தையின் வளர்ச்சிப் படிகள்; 2ம் வருடம்



அம்மா என்ன நடக்கிறது வீட்டில். எல்லா இடமும் பலூன் ஊதித் தொங்விட்டுக்கிடக்கு. ஏதோ சோடிச்சும் கிடக்கு. நிறைய ஆக்கள் வருகினம். என்ரை கன்னத்தை தடவுகினம். செல்லமாகக் கிள்ளுகினம். சந்தோசமாக இருக்கு. சில ஆக்களைப் பார்க்க பிடிக்கயில்லை

என்னைப் போல சின்னப் பிள்ளளைகளும் வந்திருக்கினம். அவவையளோடை விளையாட விரும்பமாகக் கிடக்கு. என்ரை விளையாட்டுச் சாமான்களை அவையள் எடுக்கிறதுதான் பிடிக்கயில்லை. எடுக்காதை எண்டு சொல்லுங்கோ அம்மா

பெரிய கேக் மேசையிலை இருந்தது. அம்மா என்ரை கையிலை கத்தியைப் பிடிச்சு கேக்கை வெட்ட எல்லாரும் ஹப்பி பேர்த் டே ரு யூ .... என்று பாடிச்சினம். அம்மா கேக் துண்டு ஒன்று தீத்திவிட்டா.

என்ன அம்மா இது. எத்தினை தரம் படம் எடுக்கிறாங்கள். எல்லாரோடையும் எடுத்தெடுத்துக் களைச்சுப் போனன். அழுகைதான் வருகிறது. தூக்கமும் வருகிறது.

தத்தித் தத்தி நடை பயின்ற எனக்கு இப்பொழுது ஒரு வயதாகி, நடையும் சற்று உறுதியாகிறது. ஆயினும் கால்களை சற்று அகற்றி பாதங்களை சற்று வளைத்துத்தான் நடக்க வேண்டியிருக்கிறது. இது எனது சமநிலை தளும்பாதிருப்பதற்காகவே.

நடக்க ஆரம்பித்த எனக்கு அது சற்றுத் திடமான பின்னர் ஓடவேண்டும் போல இருக்கிறது. அம்மா நீங்கள் ஏன் என்னைப் பின் தொடர்கிறீர்கள். நான் விழமாட்டேன்.

அம்மா ... கத்தி அழுகிறேன். ஆம் விழுந்துவிட்டேன் தான். வலிக்கிறது. ஆனாலும் என்ன வலி தணிந்தவுடன் மீண்டும் ஓட்டம்தான். ஓட்டம் ஒரு சாகசம் போல என்னை மீண்டும் அழைக்கிறது. நிற்கும் போதும் நடக்கும் எனது உடல் சமநிலையைப் பேணும் ஆற்றல் வந்துவிட்டதால் விரைவில் விரல் நுனியில் நிற்கும் ஆற்றலும் வந்துவிடும்.

சோபா வைக் கண்டதும் அதில் ஏற வேண்டும் என்ற ஆசை வருகிறது. படிப்படியாக ஏறவும் பழகிவிடுகிறேன். இறங்கத் தெரியவில்லை. நான் அதிலிருந்து விழுந்துவிடுவேன் என நீங்கள் பயப்படுவது உண்மைதான். இறங்கத் தெரியாமல் குனிந்து விழுந்து விடுவேன். கவனித்துக் கொள்ளுங்கள். விழாமல் இறங்கும் முறையைச் சொல்லித் தாருங்கள். உடலைச் சரித்து கால்களை கீழே விட்டு, நிலத்தில் ஊன்றும் முறையைப் பழக்கிவட்டால் விழமாட்டேன் தானே. ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு படிகளில் ஏறி இறங்கவும் முயல்கிறேன். விரைவில் செய்வேன்.

கால்களுக்கு நிற்கவும் நடக்கவும் திறன் வந்தது போலவே எனது கைகளும் துருதுரு வெனச் செயற்படத் துடிக்கின்றன.

பந்து தந்தீர்கள். கைகளால் பிடித்து ஆராய்ந்து பார்த்தேன். அது என்ன மாதிரியானது.  வீசி எறிந்த போது அது துள்ளித் துள்ளிப் போவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே திரும்பத் திரும்ப எறிந்து பார்க்கிறேன். பொம்மைகள், ஏனைய விளையாட்டுப் பொருட்களையும் எறிந்து பார்க்கிறேன். நீங்கள் தந்த அப்பிள் துண்டையும் எறிந்து பார்க்கிறேன். ஆனால் அவை துள்ளவில்லையே! ஏன் அம்மா?

இன்னும் கொஞ்ச நாள் போனதும் பந்தை இரு கைகளாலும் தலைக்கு மேல் தூக்கி எறியவும் பழகிவிடுவேன்.

பந்தை முழக் கையாலும் பற்றிய எனக்கு இப்பொழுது விரல்களால் சிறிய பொருட்களையும் பற்றும் ஆற்றல் வந்திருக்கிறது. நிலத்தில் விழுந்து கிடக்கும் சிறிய தூசி, பேப்பர் துண்டு போன்றவற்றை பற்றி எடுக்க முடிகிறது. சிலவேளைகளில் அவற்றை வாயில் போட்டு உங்கள் ஏச்சையும் வாங்க நேர்கிறது. சின்னக் கரண்டியால் உணவுகளை எடுத்து உண்ணக் கூடிய திறமையும் சிறிது சிறிதாக வருகிறது. சோக் கட்டி தந்தால் அதைக் கொண்டு ஏதாவது கீறவும் பழகிவிடுவேன்.

அம்மா நீங்கள் ஸ்மாரட் போனை கையில் வைத்து பேசுவதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. நீங்கள் வாங்கித் தந்த போன் பொம்மையை மட்டுமல்ல வேறு பொருட்களையும் முகத்துக்கு அருகே பிடித்து போன் பேசுவது போல விளையாடுவதும் எனக்குப் பிடித்திருக்கிறது.

நீங்கள் என்னைத் தூக்குவதும் முத்தமிடுவதும் போலவே கரடிப் பொம்மையைத் தூக்கி அணைக்கவும் அதற்கு கிஸ்ஸா கொடுத்து விளையாடவும் எனக்குப் பிடிக்கிறது. Bye Bye  சொன்னால் கை ஆட்டி விடை கொடுக்கிறேன். விரைவில் நானே Bye Bye  சொல்லவும் பழகிவிடுவேன்.

ஒரு சில சிறு சொற்களை சொல்லவும் முடிகிறது. அம்மா சுலபமாக வந்துவிட்டது. அப்பா, மாமா, காக்கா, வெளவா போன்ற வேறு சில சொற்களும் வருகின்றன.

சில சொற்களைச் சேர்த்து வசனமாகப் பேசவும் முயல்கிறேன். நீங்களும் அப்பாவும் பேசிக் கொண்டிருக்கும் போது எனக்கும் சேர்ந்து பேச வேண்டும் என்ற ஆசை வருகிறது. நானும் கைகளை அசைத்து நீங்கள் பேசுவது போல ஏதோ சொல்ல முயல்கிறேன். உங்களுக்குப் புரியவில்லை. ஆனால் என்னை ஆச்சரியத்தோடு பார்க்கிறீர்கள்.

விரைவில் இரண்டு மூன்று சொற்களைக் கொண்ட வசனங்களையும் பேச ஆரம்பித்துவிடுவேன். நான் பேசுவது சில சொற்களாக மட்டுமே இருந்தாலும் நீங்கள் சொல்லும் பல வார்த்தைகளையும் புரிந்து கொள்ள முடிகிறது.

பெரியவர்கள் செய்வதை எல்லாம் நானும் செய்ய வேண்டும் போலிருக்கும். பேனையைக் கண்டால் எடுக்க வேண்டும் போலிருக்கும். போனுக்குள்ளும் நீங்கள் பார்ப்பதைப் போல எனக்கும் பார்க்க விருப்பமாயிருக்கும். ஆனால் தரமாட்டீர்களே.

போனை எடுக்க முயன்றால் வேண்டாம் என்பீர்கள். கதிரையில் ஏறி மேசையிலும் ஏற முயன்றால் வேண்டாம் என்பீர்கள். சமையறைக்குள் குழியலறைக்கும் போக முயன்றால் தடுத்துவிடுவீர்கள். வாயுக்குள் எதையாவது வைத்தால் 'கூடாது எடு'என உறுக்குவீர்கள். நீங்கள் எதையாவது செய்ய வேண்டாம் என்றால் அதைச் செய்ய வேண்டும் போலிருக்கிறது. செய்துவிட்டு உங்களைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி இருக்கிறது.

பொருட்களையும் ஆட்களையும் என்னால் அடையளம் காண முடிகிறது. எனது புத்தகத்தை எடுத்து நீங்கள் ஆப்பிள், ஒரேஜ், தக்காளி எனச் சொல்லச் சொல்ல எனக்கு அவற்றை அடையாளம் காட்ட முடியும். அதே போல கோழி, நாய், பூனை, கோழி எனப் பல மிருகங்களையும் அடையளம் காட்ட முடியும்.

அம்மா என்னை ஒருநாள் மிருகக் காட்சிச்சாலைக்கு கூட்டிப் போனீர்கள்தானே. அங்கே நான் படத்தில் பார்த்த மிருகங்கள் நிஜமாகவே இருந்ததைத் பார்க்க சற்று பயமாக இருந்தது. ஆயினும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

அதே போல கண், வாய், மூக்கு, கை போன்ற உடல் அங்கங்களையும் அடையாளம் காண முடிகிறது.

கொடியில் தோய்த்த உடைகள் காயப் போட்டிருந்தால் எனக்கு அவை யாருடையது என அடையாளம் காட்ட முடியும். நீங்கள் ஒரு உடையைச் சுட்டிக் காட்டும் போது அது அப்பாவுடையது எனில் அப்பா எனச் சொல்வேன். அம்மாவினது எனில் அம்மா என்று சொல்வேன். எப்படி நான் சுட்டிதானே?

நிறங்களையும் அடையாளம் காணும் ஆற்றலும் விரைவில் வந்துவிட்டது.

அம்மா வீட்டிற்குள் அடைந்து கிடந்து எனக்கு அலுத்துவிட்டது. வெளியே கூட்டிப் போங்கள். அன்று மிருகக் காட்சிச்சாலைக்கு போனது நல்ல சந்தேசமாக இருந்தது. கடற்கரைக்கு பூங்காவனங்களுக்கு, பிள்ளைகளின் விளையாட்டு முற்றங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள். புதிய இடங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தரும். விதம்விதமான மனிதர்களைப் பார்க்கவும் விருப்பம்.

உடனடியாக அவர்களுடன் சேர்ந்துவிடத் தயக்கமாக இருந்தாலும் பழகிவிடுவேன். அங்குள்ள சுத்தமான காற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்களே. புதியனவற்றைக் காண்பதும் கேட்பதும் எனது அறிவு வளர்ச்சிக்கும் நல்லதுதானே.

நீங்கள் எனக்கு ஆடை அணிவிக்கும் போது கையை நீட்டு, காலைத் தூக்கு என்று சொல்லும் போது என்னால் இப்பொழுது அவற்றைச் செய்ய முடிகிறது. பிடிக்காத உடை என்றால் போட மாட்டேன் என அடம்பிடித்து உங்களிடம் பேச்சு வாங்கியதும் உண்டு அல்லவா?

குளியலறை, சமையலறை போன்ற இடங்களுக்கு நான் போவதைத் தடுக்கிறீர்கள். எனக்கு கோபம் வருகிறது. குளியறையில் தொட்டியில் அல்லது வாளியில் தண்ணி இருக்கும். நான் குனிந்து அதைப் பார்க்கும் போது தவறி விழுந்தால் உயிராபத்து என்று சொன்னீர்கள். புரிகிறது. ஆனாலும் ஆசையை அடக்க முடிவதில்லை. எனவே நீங்கள் தடுத்து வைத்திருப்பது சரிதான்.

சமையலறைக்குள் போய் கத்தி கரண்டி கோப்பை எல்லாம் எடுக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் தடை போட்டு வைத்திருக்கிறீர்கள். கத்தி கையை வெட்டிப்போடும் என வெருட்டுகிறீர்கள். காஸ் அடுப்பின் திருகியை முறுக்கிப் பார்க்க விருப்பம். நெருப்பு ஆபத்து என பயமுறுத்துகிறீர்கள்.

நான் வளர்கிறேன். எனது ஆற்றல்களும் அதிகரிக்கின்றன. விரைவில் இரண்டு வயதைத் தாண்டி மூன்றாம் வயதில் காலடி எடுத்து வைப்பேன். மேலும் புதிய ஆற்றல்கள் எனக்காகக் காத்திருக்கின்றன.

உங்கள் ஒத்துழைப்பும் அரவணைப்பும் இல்லாமல் எதும் முடியாது. தொடர்ந்தும் கைகொடுத்து வழிகாட்டுங்கள் அம்மா.

டொக்டர். எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0


Viewing all articles
Browse latest Browse all 292

Trending Articles